யுவராஜ் பள்ளியிலே மாணவன் அபிஷேக்... * மின்னல் வேக சதம் எப்படி
மும்பை: யுவராஜ் வழியில் அதிரடியாக விளையாடுகிறார் அபிஷேக் சர்மா. இமாலய சிக்சர் விளாசும் இவர், இந்திய அணியின் புதிய பொக்கிஷமாக உருவெடுத்துள்ளார்.
இந்திய அணியின் இளம் வீரர் அபிஷே சர்மா 24. மும்பையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 5வது 'டி-20' போட்டியில் 37 பந்தில் சதம் விளாசி சாதித்தார். இவருக்கு வழிகாட்டியாக இருப்பவர் இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங். இருவரும் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள்.
இதுகுறித்து அபிஷேக் சர்மா கூறியது:
எனது கிரிக்கெட் வளர்ச்சிக்கு யுவராஜ் சிங் முக்கிய காரணம். என் மீது நம்பிக்கை வைத்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன் இவரிடம் பயிற்சியை துவங்கினேன்.
அப்போது, 'நீண்ட காலம் பிரகாசிக்கக்கூடிய வீரராக உன்னை உருவாக்க விரும்புகிறேன். நீ சிறப்பாக விளையாட வேண்டும். இந்திய அணிக்காக நிறைய போட்டிகளில் வெற்றி பெற்றுத் தர வேண்டும்,'' என்றார்.
இவரது வார்த்தைகள் தற்போது நிஜமாகியுள்ளன. 'டி-20' போட்டியில் 15 முதல் 20 ஓவர் வரை நான் பேட் செய்ய வேண்டும் என விரும்பினார். நிலைத்து நின்று சதம் விளாசியதால், மகிழ்ச்சியாக இருப்பார் என நம்புகிறேன்.
தேசத்திற்காக சிறப்பாக விளையாடுவது 'ஸ்பெஷல்' உணர்வைத் தரும். இன்றைய நாள் எனக்கானது எனத் தெரியவரும் போது, முதல் பந்தில் இருந்து ரன்மழையை துவக்கி விடுவேன். இத்தொடரில் சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. எனினும் பயிற்சியாளர் காம்பிர், கேப்டன் சூர்யகுமார் தொடர்ந்து ஆதரவு அளித்தனர். இது பெரிய ஊக்கமாக இருந்தது.
இவ்வாறு அபிஷேக் சர்மா கூறினார்.
ஆறு சிக்சர்
அபிஷேக் சர்மா கூறுகையில், ''இங்கிலாந்துக்கு எதிரான 'டி-20' போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் ஓவரின் 6 பந்தில் 6 சிக்சர் விளாசினார் யுவராஜ் சிங். இந்த சாதனையை தகர்க்க முடியுமா எனத் தெரியவில்லை. போட்டிக்கு முன் இதுபோல விளாசும் திட்டம் எதுவும் அவரிடம் இல்லை. சூழ்நிலை அமையும் போதும் எதுவும் நடக்கலாம். சாதனைகளை நினைத்து விளையாடினால் நடக்காது,''என்றார்.
சாம்சன் காயம்
இந்திய அணி விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன். இங்கிலாந்து தொடரில் 5 போட்டியில் 51 ரன் மட்டும் எடுத்தார். மும்பை போட்டியில் ஆர்ச்சர் வீசிய பந்து தாக்கியதில் வலது ஆட்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. குணமடைய 5 முதல் 6 வாரம் தேவைப்படும். மார்ச்சில் துவங்கும் ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கலாம்.
'ரிஸ்க்' எடுக்கலாமா
இந்திய அணி பயிற்சியாளர் காம்பிர் கூறுகையில்,'' வீரர்கள் 'ரிஸ்க்' எடுத்து விளையாட வேண்டும். அப்போது தான் பெரிய வெற்றி கிடைக்கும். ஒவ்வொரு போட்டியிலும் 250 முதல் 260 ரன் வரை குவிக்க வேண்டும். இதற்கான முயற்சியில் ஈடுபடும் போது, சில நேரங்களில் 120-130 ரன்னில் ஆல் அவுட்டாக நேரிடும். போட்டிகளில் தோற்பதை நினைத்து பயப்படவில்லை. 'டி-20' கிரிக்கெட்டில் இதெல்லாம் சகஜம் தான். இதைப் புரிந்து கொண்டு வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். நாங்கள் சரியான பாதையில் பயணிக்கிறோம்,'' என்றார்.