தங்கம் வென்றார் வேலவன் செந்தில்குமார் * தேசிய விளையாட்டில் அபாரம்
டேராடூன்: தேசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார் தங்கப்பதக்கம் கைப்பற்றினர்.
இந்தியாவின் 38வது தேசிய விளையாட்டு உத்தரகாண்ட்டில் நடக்கிறது. 37 அணிகளில் இருந்து 10,000 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். ஆண்கள் ஒற்றையர் ஸ்குவாஷ் பைனலில் தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார், மகாராஷ்டிராவின் ராகுலை எதிர்கொண்டார். இதில் வேலவன் செந்தில்குமார், 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றினார். மற்றொரு தமிழக வீரர் அபே சிங், வெண்கலம் கைப்பற்றினார்.
பெண்கள் ஸ்குவாஷ் ஒற்றையர் பைனலில், கோவாவின் ஆகான்ஷா, 3-0 என மகாராஷ்டிராவின் அஞ்சலியை வீழ்த்தி தங்கம் வென்றார். தமிழகத்தின் ராதிகா, வெண்கலம் வென்றார். தமிழகத்தின் பூஜா, ராதிகா, ஷமீனா, தீபிகா இடம் பெற்ற ஸ்குவாஷ் அணி, வெள்ளிப்பதக்கம் வசப்படுத்தியது.
ருத்ரமாயன் கலக்கல்
ஆண்களுக்கான +109 கிலோ பளுதுாக்குதலில் தமிழக வீரர் ருத்ரமாயன் (355 கிலோ), இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி வென்றார். இவர் 'ஸ்னாட்ச்' பிரிவில் 175 கிலோ துாக்கி தேசிய சாதனை படைத்தார். சர்வீசஸ் அணியின் லவ்பிரீத் (367), தங்கம், உத்தரகாண்ட்டின் விவேக் (280), வெண்கலம் கைப்பற்றினர்.
பெண்களுக்கான +87 கிலோ பிரிவில் பஞ்சாப்பின் மேஹாக், ஸ்னாட்ச் (106 கிலோ), 'கிளீன் அண்டு ஜெர்க்' (141 கிலோ) என இரு பிரிவிலும் புதிய சாதனை படைத்து தங்கம் வென்றார்.
ஆறாவது தங்கம்
கர்நாடக நீச்சல் வீராங்கனை தினிதி 15. இவர், 400 மீ., பிரீஸ்டைல் பிரிவில் தேசிய சாதனையுடன் தங்கம் (4 நிமிடம், 24.60 வினாடி) வென்றார். இந்த தேசிய விளையாட்டில் இவர் வென்ற 6வது தங்கம் (1 வெள்ளி உட்பட மொத்தம் 7) ஆனது.
ஜோனாதன் அபாரம்
துப்பாக்கிசுடுதல் 10 மீ., ஏர் பிஸ்டல் பைனல் நடந்தது. பெங்களூருவின் 15 வயது வீரர் ஜோனாதன் ஆன்டனி (240.7 புள்ளி) தங்கம் கைப்பற்றினார். பாரிஸ் ஒலிம்பிக்கில், இப்பிரிவில் மனு பாகருடன் இணைந்து வெண்கலம் வென்ற சரப்ஜோத் சிங், இம்முறை நான்காவது இடம் பிடித்தார். தேசிய சாதனையாளர், ஒலிம்பிக்கில் பங்கேற்ற சவுரப் சவுத்ரி, 9வது இடம் பெற்று, தகுதிச்சுற்றுடன் வெளியேறினார்.
* பெண்களுக்கான 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் பிரிவில் பஞ்சாப் வீராங்கனைகள் சிப்ட் கவுர் (461.2) தங்கம், அஞ்சும் மவுத்கில் (458.7) வெள்ளி வென்றனர்.