பிரக்ஞானந்தா புதிய சாம்பியன் * உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தினார்
விஜ்க் ஆன் ஜீ: நெதர்லாந்து செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். சக வீரரான உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தினார்.
நெதர்லாந்தில் டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரின் 87வது சீசன் நடந்தது. 'மாஸ்டர்ஸ்' பிரிவின் 12 சுற்று முடிவில் இந்தியாவின் குகேஷ் 18, பிரக்ஞானந்தா 19, தலா 8.5 புள்ளியுடன் முதலிடத்தில் இருந்தனர். 13வது, கடைசி சுற்றில் பிரக்ஞானந்தா, சுமார் 7 மணி நேர போராட்டத்துக்குப் பின், ஜெர்மனியின் வின்சென்ட்டிடம் தோல்வியடைந்தார்.
மற்றொரு போட்டியில் குகேஷ், சக இந்திய வீரர் அர்ஜுனிடம் வீழ்ந்தார். இத்தொடரில் இவர் அடைந்த முதல் தோல்வி இது. 13 சுற்று முடிவில் குகேஷ் (8.5), பிரக்ஞானந்தா (8.5) சம நிலையில் இருந்தனர்.
விதி என்ன
'டாடா ஸ்டீல்' தொடரின் விதிப்படி, 13 சுற்றுக்குப் பின் இருவரும் சம புள்ளியில் இருந்தால், வெற்றியாளரை முடிவு செய்ய இரண்டு ரேபிட் 'டை பிரேக்கர்' போட்டிகள் நடத்தப்படும். இருவருக்கும் தலா 3:00 நிமிடம் தரப்படும். இதிலும் முடிவு கிடைக்காத பட்சத்தில், 'சடன் டெத்' முறையில் வெற்றியாளர் முடிவு செய்யப்படுவார்.
* இதன் படி, முதல் 'டை பிரேக்கர்' போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 42வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். குகேஷ் 1.0-0 என முந்தினார்.
* இரண்டாவது போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 39 வது நகர்த்தலில் வெற்றி பெற, ஸ்கோர் 1.0-1.0 என மீண்டும் சமன் ஆனது.
'திரில்' வெற்றி
இதையடுத்து 'சடன் டெத்' முறைக்கு ஆட்டம் சென்றது. இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடும் வீரருக்கு 2:30 நிமிடம், கருப்பு நிற காய்களுடன் விளையாடும் வீரருக்கு 3:00 நிமிடம் தரப்படும்.
வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா. 50வது நகர்த்தல் வரை இருவரும் சமநிலையில் இருந்தனர். அடுத்து குகேஷ் தவறு செய்ய, பின் தங்கினார். வாய்ப்பை பயன்படுத்திய பிரக்ஞானந்தா, 62 வது நகர்த்தலில் 'திரில்' வெற்றி பெற்றார். 2.0-1.-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார். குகேஷ் இரண்டாவது இடம் பெற்றார். உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக், 8.0 புள்ளியுடன் மூன்றாவது இடம் பிடித்தார்.
இரண்டாவது இந்தியர்
'டாடா' தொடரில் இந்தியாவின் ஆனந்த் 5 முறை (1989, 1998, 2003, 2004, 2006) கோப்பை வென்றார். இத்தொடரில் கோப்பை வென்ற இரண்டாவது இந்தியர் ஆனார் பிரக்ஞானந்தா.
ஆனந்த் வெளியிட்ட செய்தியில்,''என்னிடம் ஐந்து கோப்பைகள் உள்ளன,'' என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
எதிர்பார்க்கவில்லை
பிரக்ஞானந்தா கூறுகையில்,'' உண்மையில் இன்னும் அதிர்ச்சியில் தான் உள்ளேன். கோப்பை வென்றது மிகவும் 'ஸ்பெஷலானது'. இதை வார்த்தைகளால் எப்படி விவரிப்பது எனத் தெரியவில்லை. ஏனெனில் நான் வெற்றி பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை,'' என்றார்.