சாலை விபத்துகளில் கடந்தாண்டு 404 பேர் பலி
செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில், 404 பேர் பலியாகி உள்ளனர். கடந்த ஆறு ஆண்டுகளில் நடந்த மொத்தம் 7,454 விபத்துகளில், 2,136 பேர் உயிரிழந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ராஜிவ்காந்தி சாலை, முக்கிய நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட சாலைகள் உள்ளன.
விதிமீறல்
இந்த சாலைகளில் தற்போது, வாகன போக்குவரத்து அதிக அளவில் இருப்பதால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதில், பலர் காயமடையும் நிலையில், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் கிராமப்பகுதிகளில் வேகத்தடைகள் இல்லாதது, உயர்கோபுர மின் விளக்குகள் எரியாதது, விபத்துகள் நடக்கும் பகுதிகளில் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்படாதது என, விபத்துகளுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
மேலும், இந்த சாலைகளில் மாடுகள் திரிவது, மதுபானம் குடித்துவிட்டு, வாகனம் ஓட்டுதல், சாலையிலேயே நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களால் தான், பெரும்பாலான விபத்துகள் நடக்கின்றன.
கிராமப்பகுதிகளில் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளின் நடுவே, அப்பகுதி கிராமத்தினரே பாதை அமைத்துக் கொள்கின்றனர். இதனால், அப்பகுதிகளில் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன.
சில வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காதது, சாலைகளில் உள்ள பள்ளங்கள் மற்றும் சாலையோர உணவகங்கள், கடைகள் அருகில் ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், விபத்துகள் ஏற்படுகின்றன.
அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில், 404 பேர் பலியாகி உள்ளனர்.
கடந்த ஆறு ஆண்டுகளில் நடந்த மொத்தம் 7,454 விபத்துகளில், 2,136 பேர் உயிரிழந்துள்ளனர்; 8,353 பேர் காயமடைந்து உள்ளனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் வி.ஏ.தமிழ்ச்செல்வன் கூறியதாவது:
தேசிய நெடுஞ்சாலையோரம், வர்த்தக ரீதியான கடைகள் இருக்கக்கூடாது என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை மீறி, கடைகள் அதிகரித்து வருகின்றன.
சாலை பள்ளம்
இந்த கடைகள் அருகில் இரவு நேரங்களில், வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. சாலை பள்ளங்களை உடனுக்குடன் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைக்காததும் விபத்துகளுக்கு முக்கிய காரணம்.
சாலை விபத்துகளை தவிர்க்க பள்ளி, கல்லுாரிகளில் போக்குவரத்து விதிகள் தொடர்பான பாடப் பிரிவை உருவாக்கி, இளம் தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்தில், சாலை விபத்துகளை குறைக்க, அனைத்து துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலை விதிகளை கடைபிடிக்காமல் அதிவேகமாக செல்லும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை கட்டுப்படுத்த, வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுகளை நிர்ணயிக்க வேண்டும். பாலங்கள், சாலை குறுக்கிடும் பகுதிகளில், எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
சாலை விபத்துகளைக் குறைப்பதற்காக பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், 18 வயதுக்கு மேல் ஓட்டுநர் உரிமம் வாங்கி, வாகனம் ஓட்ட வேண்டும் எனவும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஆட்டோ ஓட்டுநர்களிடம் சீருடையின்றி, குடிபோதையில் வாகனங்கள் ஓட்டக் கூடாது என அறிவுறுத்தி உள்ளோம்.
- பி.இளங்கோ,
வட்டார போக்குவரத்து அலுவலர்,செங்கல்பட்டு.