சிப்காட்டிற்கு குடியிருப்பு பகுதியை கையகப்படுத்த பகுதியினர் எதிர்ப்பு
திருவள்ளூர்,
கும்மிடிப்பூண்டி அருகே, சிப்காட் தொழில் பூங்காவிற்கு குடியிருப்பு பகுதியில், நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, கிராமத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கும்மிடிப்பூண்டி, வாணியமல்லி கிராமத்தினர், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு:
வாணியமல்லி கிராமத்தில், 150க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள், மூன்று தலைமுறையாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில், மாநெல்லுார் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்கு, நிலம் கையகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.
இதில், எங்கள் ஊர் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகள், பள்ளிக்கூடம், ஏரி மற்றும் சுடுகாடு சேர்த்து கையகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
மேலும், கடந்த குடியரசு தினத்தன்று, கிராமசபையில் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். எனவே, எங்கள் வாழ்வாதாரமான குடியிருப்பு, ஏரி மற்றும் சுடுகாட்டு எல்லையில் இருந்து, 500 மீட்டர் தொலைவிற்கு அப்பால் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.