தாயை தாக்கிய கவுன்சிலர் கணவர் கைது
திருத்தணி, பிப். 4--
திருத்தணி, அக்கைய்யாநாயுடு தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 40. இவரது மனைவி ரேவதி, 35, என்பவர், திருத்தணி நகராட்சி 11வது வார்டு ஆளும் கட்சி கவுன்சிலராக உள்ளார்.
இவர்களின் வீட்டின் அருகில், சுரேஷின் தாய் நிர்மலா, 65, வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சுரேஷின்மகன் சாருஹாசனை பாட்டி நிர்மலா திட்டிய தாக கூறப்படுகிறது.
இதனால் சுரேஷுக்கும் அவரது தாய் நிர்மலாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுரேஷ், அருகிலிருந்த கல்லை எடுத்து தாய் நிர்மலா தலையின் மீது அடித்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த நிர்மலாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து நிர்மலா அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து, சுரேஷை நேற்று கைது செய்தனர்.