இஸ்லாமிய ஆட்சியை நிறுவ சதி திட்டம்; என்.ஐ.ஏ., ரெய்டு;
சென்னை : 'ஹிஸ்ப் உத் தஹ்ரீர்' அமைப்பில் சேர்ந்து, 'கிலாபத்' எனும் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ, பயங்கரவாத செயலுக்கு சதி திட்டம் தீட்டி செயல்பட்டு வந்த, முக்கிய புள்ளிகள் இரண்டு பேரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்தியா உட்பட பல நாடுகளில், ஹிஸ்ப் உத் தஹ்ரீர் என்ற பயங்கரவாத அமைப்புக்கு தடை உள்ளது.
இந்த அமைப்புக்கு ஆட்கள் சேர்த்து, ரகசிய பயிற்சி அளித்தது தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த ஹமீது உசேன், அவரின் தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் ஆகியோர், 2024, மே மாதம், சென்னை, மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
பின், அவர்களின் கூட்டாளிகள் மூவர் கைதாகினர்.
இது தொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அவர்கள், ஹிஸ்ப் உத் தஹ்ரீர் அமைப்புக்கு ஆள் சேர்த்து, பயங்கரவாத செயலுக்கு சதி திட்டம் தீட்டி செயல்பட்டது தொடர்பாக, சென்னை மற்றும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி உட்பட, ஆறு இடங்களில், நேற்று காலை, 5:00 மணியில் இருந்து, மாலை, 3:00 மணி வரை சோதனை நடத்தினர்.
அப்போது, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாவா பக்ருதீன், 44; கபீர் அகமது அலியார், 48, ஆகியோரை கைது செய்தனர். பாவா பக்ருதீன், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே, நாச்சிக்குளத்தைச் சேர்ந்தவர்.
தன் மனைவி ஊரான மன்னார்குடியில், நான்கு ஆண்டுகளாக வசித்து வருகிறார். அவர், மன்னை பாவா என, அழைக்கப்படுகிறார். தஞ்சாவூரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவரும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த கபீர் முகமது அலியாரும், தடை செய்யப்பட்ட ஹிஸ்ப் உத் தஹ்ரீர் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்து, ரகசிய ஆயுத பயிற்சி அளித்து வந்துள்ளனர்.
அவர்களின் வீடுகளில் நடத்திய சோதனையில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். அதன் அடிப்படையில், இருவரிடமும் விசாரணை நடத்தினர்.
அப்போது, இந்தியாவின் இறையாண்மையை சீர்குலைக்க வேண்டும். கிலாபத் எனும் இஸ்லாமிய ஆட்சியை நிறுவன வேண்டும்.
அதற்கு தற்போது உள்ள, அரசின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என, சதி திட்டம் தீட்டி செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளதாக, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.