உயிர் காக்கும் மருந்து தட்டுப்பாடு; குழந்தைகளின் பெற்றோர் முறையீடு உயிர் காக்கும் மருந்து தட்டுப்பாடு; குழந்தைகளின் பெற்றோர் முறையீடு

திருப்பூர்; திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், ஹார்மோன் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உயிர் காக்கும் மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்ககோரி, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர், கலெக்டரிடம் முறையிட்டுள்ளனர்.

ஹார்மோன் குறைபாடுள்ள குழந்தைகள், சிறுவர், சிறுமியருக்கு, திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், ஊசி மருந்து வழங்கப்பட்டு வருகிறது. முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் வாயிலாக, அரசு மருத்துவமனையில் தங்கள்குழந்தைகளுக்கான மருந்து வாங்கி, பெற்றோர் பயன்படுத்தி வருகின்றனர். சில மாதங்களாக அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், உயிர் காக்கும் மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், ஹார்மோன் பாதித்த குழந்தைகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், தாராபுரத்தை சேர்ந்த அல்லிராஜ் என்பவர் தலைமையில், ஹார்மோன் குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோர் பங்கேற்று மனு அளித்தனர்.

அல்லிராஜ் கூறியதாவது:

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், ஹார்மோன் பாதித்த 22 சிறுவர், சிறுமியர் தொடர்ச்சியாக மருந்து பெற்று பயன்படுத்தி வருகின்றனர். சில மாதங்களாக, அரசு மருத்துவமனையில், ஹார்மோன் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டால், மருந்து இல்லை என்கின்றனர். தனியார் மருத்துவமனை மருந்தகங்களில், மாதம் 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாய்க்கு மருந்து வாங்க வேண்டியுள்ளது.

ஏழை பெற்றோரால், அதிக விலை கொடுத்து தங்கள் குழந்தைகளுக்கான உயிர் காக்கும் மருந்து வாங்க முடிவதில்லை. மாவட்டம் முழுவதும், ஹார்மோன் குறைபாடுள்ள குழந்தைகள், மருந்து கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். அரசு மருத்துவமனையில், ஹார்மோன் மருந்துகள் தடையில்லாமல் கிடைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement