யு.எஸ்., எய்ட் தொண்டு நிறுவன நிர்வாகியாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் நியமனம்


வாஷிங்டன்: மூடப்பட்ட யு.எஸ்., எய்ட் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகியாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ நியமிக்கப்பட்டுள்ளார்.

வாஷிங்டன் நகரை தலைமை இடமாகக் கொண்ட யு.எஸ்., எய்ட் தொண்டு நிறுவனம் உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. மனிதாபிமான உதவி, வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றுக்கு துணை நின்று அமெரிக்க நலன்களை பாதுகாப்பதே இந்த தொண்டு நிறுவனத்தின் நோக்கம்.

ஆண்டுக்கு 50 பில்லியன் டாலர், அதாவது 4 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் அமெரிக்க அரசின் நிதி உதவியில் இந்தத் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது.

இந்த தொண்டு நிறுவனம், தவறான செயல்களுக்கு பயன்படுவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதன் மூலம் அமெரிக்க மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும், அதிபர் டிரம்ப், திறன் மேம்பாட்டு துறை தலைவரான தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகியோர் குற்றம் சாட்டினர்.


அதிபர் டிரம்ப் பொறுப்பேற்ற அன்றைய தினமே, யு.எஸ். எய்ட் தொண்டு நிறுவனத்தின் பணிகள் அனைத்தையும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். நேற்று அதன் வாஷிங்டன் தலைமையகம் மூடப்பட்டது. பணியாளர்கள் யாரும் வேலைக்கு வரத் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டது.



இந்நிலையில் அமெரிக்க அரசு சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கை: யு.எஸ்., எய்ட் நிறுவனம் வெளிநாடுகளில் அமெரிக்க நலன்களை பாதுகாத்து கண்காணிக்கும் பணியை நீண்ட காலமாக செய்யவில்லை. அமெரிக்காவின் முக்கிய தேசிய நலன்களுடன் ஒத்துப்போகவில்லை என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது.
நிறுவனத்தின் செயல்பாடுகளில் கட்டுப்பாட்டையும் சிறந்த புரிதலையும் பெறுவதற்கான இடைக்கால நடவடிக்கையாக, அதிபர் டிரம்ப், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை செயல் நிர்வாகியாக நியமித்தார்.

வெளிநாட்டு உதவி நடவடிக்கைகள் குறித்த மறுஆய்வு நடந்து வருவதாக ரூபியோ தெரிவித்துள்ளார். அமெரிக்க மக்களின் நலன்களைப் பாதுகாப்பதையும், அவர்களின் வரி பணங்கள் வீணாகாமல் இருப்பதை உறுதி செய்வதையும் யு.எஸ்., எய்ட் நிறுவனம் தொடர்ந்து மேற்கொள்ளும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement