கலெக்டர் அலுவலக செய்தி

காற்றில் பறக்கும் கரித்துகள்; நிறம் மாறிய தண்ணீர்

திருப்பூர் - ஊத்துக்குளி ரோடு, மாநகராட்சி 33வது வார்டு, கார்த்திக் நகரில் செயல்பட்டு வரும் ஒரு சாய ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி இப்பகுதியினர், கலெக்டர் கிறிஸ்துராஜிடம் மனு அளித்தனர்.

கலெக்டரிடம் மக்கள் கூறியதாவது:

ஆலையில் மிக குறைந்த உயரம் கொண்ட மூன்று புகை போக்கிகள் மூலம், 24 மணி நேரமும் நச்சு புகை வெளியேறுகிறது. கரித்துகள் காற்றில் கலந்து, அயோத்யா நகர், கார்த்திக் நகர், ராஜீவ் நகர், கொளக்காடு தோட்டம், புங்கமரத்தோட்டம், பாரப்பாளையம் பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகளில் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுத்துகிறது.

மக்களுக்கு சுவாச கோளாறு, தோல்நோய், உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. ஆபத்தான பாய்லர்களிலிருந்து இரவு நேரங்களில் ஒலி எழுவதால், பெரும் அச்சம் ஏற்படுகிறது. அருகாமையில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் தண்ணீ ரின் நிறமும் மாறியுள்ளது.

இவ்வாறு, மக்கள் கூறினார்.

மக்களிடமிருந்து மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், மாசுகட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் செந்தில்குமாரிடம், 'மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சாய ஆலை தொடர்பாக கள ஆய்வு நடத்தி, விரைந்து அறிக்கை அளிக்க வேண்டும்' என, அறிவுறுத்தினார்.

Advertisement