புத்தக கண்காட்சி நிறைவு; ரூ.1.25 கோடிக்கு விற்பனை

திருப்பூர்; திருப்பூரில், 11 நாட்கள் நடந்த புத்தக திருவிழாவில், 1.25 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகின.

தமிழக அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம்மற்றும் 'பின்னல்' புக் டிரஸ்ட் சார்பில், வேலன் ஓட்டல் மைதானத்தில், கடந்த மாதம், 23ம் தேதி புத்தக திருவிழா துவங்கியது.

தொடர்ந்து, 11 நாட்கள் நடந்த புத்தக திருவிழா, நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதில், 140 அரங்குகளில், 80 பதிப்பகத்தினர் புத்தகங்களை காட்சிப்படுத்தி, விற்பனை செய்தனர்.

விழா ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், 'புத்தக கண்காட்சியில், 1.25 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகின.

ஒரு லட்சத்துக்கும் மேல் பார்வையாளர்கள் பங்கேற்றிருப்பினும், இது, கடந்தாண்டை விட குறைவு,' என்றனர்.

புத்தகங்கள் வாசிப்பால்

சிறைவாசிகள் மனமாற்றம்

புத்தக கண்காட்சியில் சிறைத்துறை சார்பில், அரங்கு அமைக்கப்பட்டு, சிறைகளில் உள்ள நுாலகங்களுக்கு புத்தகங்கள் நன்கொடையாக பெறப்பட்டன. நிறைவு நாளில், 1,500 புத்தகங்கள் நன்கொடையாக பெறப்பட்டன. ஆனால், கடந்தாண்டு, 4,800க்கும் மேற்பட்ட புத்தகங்கள் நன்கொடையாக பெறப்பட்டது.''நன்கொடையாக திரட்டப்படும் புத்தகங்கள் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மண்டலத்துக்கு உட்பட்ட சிறைகளில் பராமரிக்கப்படும் நுாலகங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது.

குறிப்பிட்ட மணி நேரம், சிறைவாசிகள் புத்தகங்கள் வாசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். அதன் வாயிலாக, அவர்கள் மத்தியில் மனமாற்றம் ஏற்படுகிறது. புத்தகங்களை நன்கொடையாக வழங்க முன்வருவோரிடம் இருந்து, நேரில் சென்று வாங்கவும் தயாராக உள்ளோம்; புத்தகம் வழங்க விரும்புவோர் 0421 - 2230311 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்'' என்றனர் சிறைத்துறையினர்.

Advertisement