விழுதுகள்தானே விருட்சங்களாகும்!
திருப்பூர்; திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில், 2001 - 2004ம் ஆண்டு பல்வேறு துறைகளில் படித்த முன்னாள் மாணவர்கள், 20 ஆண்டு இடைவெளிக்கு பின்,கல்லுாரியில் ஒன்று கூடினர்.
துள்ளி குதித்து ஓடி மகிழ்ந்து, அரட்டை அடித்த கல்லுாரி காலங்களின் நினைவலையை பரஸ்பரம் பகிர்ந்து மகிழ்ந்தனர். 'பட்டதாரி' என்ற அடையாளம் வழங்கிய கல்லுாரிக்கு, தங்களால் இயன்றதை செய்ய வேண்டும் என்ற உந்துதலில், ஒவ்வொருவரும் இயன்ற பங்களிப்பை வழங்க, ஒரு லட்சம் ரூபாய் வரை திரட்டி, வகுப்பறைகளுக்கு தரமான அலமாரியை அன்பளிப்பாக வழங்கி, ஆத்ம திருப்தி அடைந்தனர்.
தங்களுக்கு வகுப்பு எடுத்த பேராசிரியர்களுக்கும் நினைவுப்பரிசு வழங்கினர்.
'நாங்கெல்லாம் தமிழ் வழிக்கல்வி பயின்று தான் கல்லுாரிக்குள் நுழைந்தோம். இன்னைக்கு எல்லோரும் நல்ல நிலைமைல இருக்கோம். ஒதுக்குப்புறமான கிராமத்துல இருந்த வந்து படிச்ச பிள்ளைங்க கூட இன்னைக்கு பெரிய வேலை, நல்ல அந்தஸ்துல இருக்காங்க.
நாலஞ்சு பேரு வெளிநாட்டில வேலை பார்க்குறாங்க. ஒரு சிலர் போலீஸ் உட்பட பல்வேறு அரசுத்துறைகள்ல வேலையில இருக்காங்க.
பேராசிரியர்கள், ஆடிட்டர், வங்கிப்பணி என, தங்களோட எதிர்காலத்தை அமைச்சிருக்காங்க. இந்த கல்லுாரியில வெறும் புத்தக படிப்பு மட்டுமில்லா, வாழ்க்கை கல்வி, ஒழுக்கத்தையும் கத்துக்கிட்டோம்.
அரசு கல்லுாரியில படிச்சாலும், நல்ல நிலைமைக்கு ஆளாக்கி விடுங்கறதுக்கு நாங்கெல்லாம் தான் உதாரணம். வரக்கூடிய காலங்கள்ல நாங்க படிச்ச கல்லுாரிக்கு நிறைய செய்யணும்னு ஆசைப்படறோம்.
அதோட துவக்கப்புள்ளி தான் இந்த சிறு உதவி,' என நெகிழ்ந்தனர் முன்னாள் மாணவர்கள்.ஆம். விழுதுகள்தானே விருட்சங்களாகும்!