டிக்கெட் கட்டண விபரம் பஸ்களில் 'பளிச்'சிடுமா?

திருப்பூர்; வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பூரில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பழநியில் இருந்து தாராபுரம், காங்கயம், அரச்சலுார் வழியாக ஈரோட்டுக்கு இயக்கப்பட்ட பஸ்சில் முன்புறமும், பின்புறமும் பஸ் டிக்கெட் கட்டண விபரம் எழுதப்பட்டிருந்தது. ஈரோட்டில் இருந்து பழநிக்கு, 72 ரூபாய், தாராபுரத்துக்கு, 50 ரூபாய், காங்கயத்துக்கு, 30, தாராபுரத்தில் இருந்து காங்கயத்துக்கு, 22 ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது.

பஸ் பயணிகள் கூறுகையில், 'பஸ் பயண கட்டண விபரங்களை, பயணத்திற்கு முன்பே அறிந்துகொண்டால், பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதேபோன்று அனைத்து பஸ்களிலும் கட்டண விபரம், பயணிக்கும் பாதை விபரங்கள் முழுமையாக பயணிகள் பார்வைக்கு தெரியும் படி எழுதினால் பயனுள்ளதாக இருக்கும். கட்டணம் அதிகமாக வாங்குகின்றனரோ என்ற சந்தேகமும் பயணிகளுக்கு எழாது,' என்றனர்.

திருப்பூர் மண்டல போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'அனைத்து பஸ்களிலும் பஸ் பயணிக்கும் வழித்தட வரைபடம், கட்டண விபரம் டிரைவர் சீட் அருகே இடம்பெற்றிருக்கும். பயணிகள் அறிந்து கொள்ளலாம்,' என்றனர்.

ஆனால், பயணிகள் கேட்பதோ கண்ணாடி அல்லது பஸ், முன், பின்புறம் பளிச்சென தெரியும் வகையில் அறிவிப்பு இருக்க வேண்டும் என்பதுத்தான்.

Advertisement