சொத்து வரி விவகாரம்; 'கிடப்பில் போட்ட கல்'
திருப்பூர்; கடந்த நவ., மாதம் நடந்த திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் வெடித்த சொத்து வரி உயர்வு விவகாரம், கடந்த ஜன., 31ல் நடந்த கூட்டத்திலும் மீண்டும் எதிரொலித்தது. கட்சியினர் மற்றும் வர்த்தகர்களின் போராட்டங்களுக்குப் பிறகும், இந்த விவகாரத்தில், இம்மியளவு கூட, எதிர்பார்ப்புகள் ஈடேறவில்லை என்கின்றனர் பொதுமக்கள்.
அரசு செயலரை சந்திக்கஅ.தி.மு.க., திட்டம்
அன்பகம் திருப்பதி, மாநகராட்சி அ.தி.மு.க., குழு தலைவர்:கோவையை விட இங்கு வரி அதிகம். தற்போதைய திருப்பூர் நிலைமையை கருத்தில் கொண்டு உயர்த்தப்பட்ட வரியை ரத்து செய்ய வேண்டும். எங்கள் தரப்பில் அனைத்து வகையிலும் இதற்கான முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து மேற்கொள்வோம். விரைவில் இது குறித்து கூடுதல் அரசு செயலரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளோம். உரிய தீர்வு கிடைக்கும் வரை மக்களுக்கான எங்கள் போராட்டம் தொடரும்.
வரி வசூலை நிறுத்தசொல்கிறது இ.கம்யூ.,
ரவிச்சந்திரன், மாநகராட்சி இ.கம்யூ., குழு தலைவர்:சொத்து வரி உயர்வு குறித்து எம்.பி., சுப்பராயன், முதல்வர் ஸ்டாலினிடம் மனு அளித்துள்ளார். நல்லதொரு தகவல் வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ., மற்றும் மேயரும் அமைச்சர்களிடமும் துறை அதிகாரிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதில் உரிய அறிவிப்பு வரும் வரை, உயர்த்தப்பட்ட வரி வசூலை நிறுத்தி வைக்க வேண்டும்.வரி உயர்வு ரத்து செய்யப்படாவிட்டால், அனைத்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தியும், கட்சி தலைமையிடம் கருத்து கேட்டும் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அரசிடம் நல்ல பதில்மேயர் நம்பிக்கை
தினேஷ்குமார், மேயர்:
சொத்து வரி விதிப்பு பிரச்னையில் உள்ள நிலவரம், நடைமுறைச் சிக்கல் ஆகியன குறித்து அரசுக்கு உரிய அனைத்து விவரங்களும் அறிக்கையாக அளிக்கப்பட்டுள்ளது.இது ஒட்டுமொத்த தமிழகத்துக்கான பிரச்னை. வரியினங்கள் வசூல் அதிகரித்தால் மட்டுமே உரிய நிதி ஆதாரங்கள் பெற்று வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள முடியும். பிற மாநகராட்சிகளுடன் ஒப்பிடுகையில் வரி வசூலில் மிகவும் பின் தங்கியுள்ளோம். கடன் சுமை, செலவினங்கள் என நிர்வாகத்துக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே கூறியது போல், இப்பிரச்னையில் அரசிடமிருந்து ஒரு நல்ல பதிலை எதிர்பார்க்கிறோம்.