மாணவருக்கு கஞ்சா விற்பனை: புகார் அளித்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்; நெசவாளர் காலனி பள்ளி மேலாண் குழு 'பகீர்'
திருப்பூர்; நெசவாளர் காலனி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதாக பள்ளி மேலாண்மைக்குழுவினர் கலெக்டருக்கு புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
திருப்பூர், பி.என்., ரோட்டில், நெசவாளர் காலனி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியும், துவக்கப்பள்ளியும் ஒரே வளாகத்தில் செயல்படுகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
வாகன மறைவில்...
நெசவாளர் காலனி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ள புகார்:
பள்ளி வளாகம் முன்பும், பின்பும் வாடகை வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால், மாணவர்களை கொண்டு வந்து விடும் பெற்றோர் வாகனங்களை நிறுத்துவதற்கு இடையூறாக உள்ளது. வாகனங்கள் மறைவில் அப்பகுதி வழியாக செல்வோர் சிறுநீர் கழிக்கின்றனர். பள்ளி மாணவியருக்கு தர்ம சங்கடமான சூழல் ஏற்படுகிறது.
துர்நாற்றம், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மறைவான பகுதியைப் பயன்படுத்தி போதைப் பொருட்கள் மாணவர்களுக்கு விற்கப்படுகின்றன. மாணவர்கள் போதைக்கு அடிமையாகின்றனர்.
3 மாதம் முன்பே மனு
இப்பிரச்னை தொடர்பாக இரண்டு பள்ளி தலைமை ஆசிரியர், வார்டு கவுன்சிலர் மூலம் மாநகராட்சி கமிஷனரிடம் அக்., மாதமே மனு அளித்தோம். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் இப்பிரச்னையை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதாக பள்ளி மேலாண்மைக்குழுவினர் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா விற்பனையாளர்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை.
- விமலா, தலைவர், பள்ளி மேலாண்மைக்குழு, நெசவாளர் காலனி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி
- விமலா, தலைவர், பள்ளி மேலாண்மைக்குழு, நெசவாளர் காலனி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிநெசவாளர் காலனி மாநகராட்சி பள்ளி துவங்கும் மற்றும் முடியும் போது போலீசார் ரோந்து பணி மேற்கொள்கின்றனர். தவறுகள் ஏதேனும் கண்டறிப்பட்டால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா விற்பனை குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படும்.- ஜெகநாதன், இன்ஸ்பெக்டர், திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன்.