கவுன்சிலர்கள் புகார்; கமிஷனர் ஆய்வு

திருப்பூர்; திருப்பூரில் தனியார் நிறுவனம் சார்பில், திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தேவையான அளவில் ஆட்கள், வாகனங்கள், உபகரணங்கள் இல்லாமல் செயல்படுவதாக புகார் எழுந்தது.

கடந்த வாரம் நடந்த மாநகராட்சி மன்ற கூட்டம், மண்டல குழு கூட்டங்களில் வார்டு கவுன்சிலர்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர். நிறுவனத்தின் மெத்தனம் காரணமாக குப்பைகள் அகற்றுவதில் தாமதம் நிலவி, சுகாதார கேடு ஏற்படுகிறது.

இதனால், மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது என்று கவுன்சிலர்கள் கடுமையாக குற்றம் சுமத்தினர். இதனால், மாமன்ற கூட்டத்திலேயே அந்நிறுவன அலுவலர்களுக்கு மேயர் தினேஷ்குமார் கடும் எச்சரிக்கை விடுத்தார். கவுன்சிலர்கள் தெரிவிக்கும் குறைபாடுகளை, 15 நாள் அவகாசத்தில் சரி செய்ய வேண்டும்.

இல்லாவிடில், டெண்டர் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை இந்நிறுவனத்தின் வாகன பராமரிப்பு மையத்தை மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி நேரில் சென்று ஆய்வு செய்தார். பராமரிப்பு மையதத்தின் செயல்பாடுகள், பழுது நீக்கும் பணிகள், பராமரிக்கப்படும் பதிவேடுகள் ஆகியன ஆய்வு செய்யப்பட்டன.

பழுதாகும் வாகனங்கள் உடனுக்குடன் சரி செய்து குப்பை அகற்றும் பணி தொய்வில்லாமல் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Advertisement