போதை பொருள் பறிமுதல்; ஒருவரிடம் விசாரணை
கூடலுார்; கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற, 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 600 கிராம் எம்.டி.எம்.ஏ., என்ற போதை பொருளை பஸ்சில் கடத்தி வந்தவரிடம், கூடலுார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து அரசு பஸ்சில் விலை உயர்ந்த போதைபொருளை கேரளாவுக்கு கடத்துவதாக, நீலகிரி மாவட்டம், கூடலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி., வசந்தகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது, எஸ்.எஸ்.ஐ., இப்ராஹிம், காவலர் பிரபா ஆகியோர், நேற்று இரவு தொரப்பள்ளி அருகே உள்ள, வன சோதனை சாவடி அருகே, வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, பெங்களூருவில் இருந்து, கேரள மாநிலம் செல்லும் கேரள மாநில அரசு பஸ்சில் சோதனை செய்தனர்.
அதில், கேரளா பாண்டிக்காடு மேலாட்டு பகுதியை சேர்ந்த முகமது சபீர்,32, என்பவர், எம்.டி.எம். ஏ., என்ற விலைஉயர்ந்த, 600 கிராம் போதை பொருளை, பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து, முகமது சபீரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போலீசார் கூறுகையில்,'முகமது சபீரிடமிருந்து, 600 கிராம் எம்.டி.எம்.ஏ., என்ற போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு, 24 லட்சம் ரூபாய் ஆகும். இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது,' என்றனர்.