தென்னை தொழிலாளர்களுக்கு காப்பீடு திட்டம்: இழப்பீடு தொகை உயர்வு

உடுமலை; மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில், தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள், அறுவடை பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள், நீரா தொழிலில் ஈடுபட்டுள்ளோர், வீரிய ஒட்டு ரக தென்னை நாற்று உற்பத்தி பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, காப்பீடு திட்டம் செயல் படுத்தப்படுகிறது.

கடந்தாண்டு வரை, இழப்பீடு தொகையாக, ரூ.5 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு முதல், ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய தென்னை வளர்ச்சி வாரிய மண்டல இயக்குனர் இள அறவாழி, தளி திருமூர்த்திநகர் மத்திய தென்னை மகத்துவ மைய உதவி இயக்குனர் ரகோத்துமன் கூறியதாவது:

தென்னை மரம் ஏறுபவர்கள், அறுவடை பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காக மத்திய தென்னை வளர்ச்சி வாரியம், நம்பிக்கையுடன் தென்னை மரம் ஏறுவோம் என்ற அடிப்படையில், 'கேரா சுரக்ஷா காப்பீடு' திட்டத்தை செயல்படுத்துகிறது.

இதில், இறப்பு, ஊனமடைதல், மருத்துவமனை, மீட்பு நாட்களில் தற்காலிக வருமான உதவி என பயன்கள் அளிக்கிறது. காப்பீடு தொகை நடப்பாண்டு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தொழிலாளியின் மருத்துவ சிகிச்சைக்காக, ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது.

மேலும், www.coconutboard.gov.in என்ற முகவரியில், விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம். மேலும், கோவை மண்டல அலு வலகம், 0422-2993684; தளி தென்னை மகத்துவ மையம் 04252- 265430 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement