பழனிசாமியை முதல்வராக ஏற்றால் மட்டுமே கூட்டணி !
பொள்ளாச்சி; அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியை, முதல்வராக ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம், என, எல்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் அ.தி.மு.க., சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னை ஈ.சி.ஆரில் காரில் சென்ற பெண்களை துரத்திய சம்பவத்தில், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய, தி.மு.க., அரசு தயாராக இல்லை. இந்த நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும்.
அ.தி.மு.க.,வுக்கு தனி கொள்கை, கோட்பாடு, திட்டவட்டமான செயல்முறை உள்ளது. பொதுச்செயலாளர் பழனிசாமியை, முதல்வராக ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம். வரும் சட்டசபை தேர்தலில், பலமான கூட்டணி அமையும்.
அ.தி.மு.க., கூட்டணி, அதிகபட்சமாக, 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். அ.தி.மு.க., கூட்டணியில் சேரும் கட்சி மட்டுமே பிரதான எதிர் கட்சியாகவும் வரும். கடந்த 2011, சட்டசபை தேர்தலில், தி.மு.க., வுக்கு ஏற்பட்ட அதே நிலைதான், வரும், 2026ல் ஏற்படும்.
தி.மு.க., அரசு, விவசாயிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களையும் கைவிட்டுள்ளது. வரியினங்கள் உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்துள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.