புதிய கல்விக் கொள்கையை ஏற்கிறதா சேலம் பல்கலை?
சென்னை; சேலம் பல்கலையில், பிஎச்.டி., படிப்புக்கான கல்வித் தகுதிகளில், நான்காண்டு இளங்கலை முடித்தோரும் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளதால், அப்பல்கலை புதிய கல்விக் கொள்கையை ஏற்கிறதா என்ற, கேள்வி எழுந்துள்ளது.
சேலம் பெரியார் பல்கலையில், முனைவர் பட்ட ஆய்வு படிப்பிற்கான கல்வித்தகுதி வெளியிடப்பட்டு உள்ளது. அதில், பிளஸ் 2 படிப்புக்குப் பின், மூன்றாண்டு இளங்கலையுடன், இரண்டாண்டு முதுகலை முடித்தோருக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மேலும், 10 + 2 + 4 படிப்பை முடித்தோரும் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைப்படி, மூன்றாண்டு இளங்கலை படிப்புக்குப் பின், இரண்டாண்டு முதுகலை படிப்பதற்கு பதிலாக, நான்காண்டு இளங்கலை பட்டம் முடித்தாலே போதும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில், புதிய கல்விக் கொள்கை ஏற்கப்படாத நிலையில், அதில் பரிந்துரைக்கப்பட்டபடி, இந்த கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக, சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு, அரசியல் கட்சியினரும், மாணவர் அமைப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி, பல்கலை நிர்வாகத்தினர் கூறுகையில், 'பல்கலை நிர்ணயித்துள்ள கல்வித்தகுதியில், எந்த விதிமீறலும் இல்லை. தமிழக மாணவர்களுக்கு தற்போதுள்ள கல்வி முறைப்படியே நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், புதிய கல்விக்கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு, முதுநிலை படிப்பையும் ஒருங்கிணைத்து, நான்காண்டு பட்டப்படிப்பாக மாற்றப்பட்டுள்ளது. அந்த மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் விதமாகவே, இந்த கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது' என்றனர்.