டிரம்பின் அதிரடிக்கு சீனாவின் பதிலடி; நிலக்கரி, எரிவாயுக்கு 15 சதவீதம் வரி விதிப்பு

2


பீஜிங்: அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் திரவ இயற்கை எரிவாயுக்கு 15 சதவீத கூடுதல் வரி விதித்து சீனா பதிலடி கொடுத்துள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, கூடுதலாக, 10 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இந்த கூடுதல் வரி விதிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதேநேரத்தில், கனடா, மெக்சிகோ நாடுகளுக்கு புதிதாக விதித்த இறக்குமதி வரியை ஒரு மாதத்திற்கு, இடைநிறுத்தம் செய்வதாக, டிரம்ப் தெரிவித்துள்ளார்.



இந்நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வர்த்தக கட்டுப்பாட்டு நடவடிக்கையை சீனா துவங்கி உள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் திரவ இயற்கை எரிவாயுக்கு 15 சதவீத கூடுதல் வரியும், எண்ணெய் மற்றும் விவசாய உபகரணங்களுக்கு 10 சதவீத கூடுதல் வரியும் விதித்து சீனா பதிலடி கொடுத்து உள்ளது. இதனால் இரு பெரிய பொருளாதார நாடுகளுக்கிடையே மீண்டும் ஒரு வர்த்தக போர் ஏற்படலாம் என கணிக்கப்பட்டு உள்ளது.

உலக வர்த்தக அமைப்பை நாடியது சீனா!



அமெரிக்கா விதித்துள்ள புதிய இறக்குமதி வரி உயர்வுக்கு எதிராக, உலக வர்த்தக அமைப்பில், சீனா புகார் அளித்துள்ளது. இது குறித்து சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது: சீனா பொருட்களுக்கு மீது கூடுதல் வரிகளை விதித்து உலக வர்த்தக அமைப்பின் விதிகளை அமெரிக்கா மீறியுள்ளது.


இந்த நடவடிக்கைகளை சீனா உறுதியாக எதிர்க்கிறது. அமெரிக்கா தனது வரி விதிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும். உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement