போலீசார் மீது தாக்குதல்! தேர்தல் நடத்தை விதிமீறல்! அதிஷி உள்ளிட்டோர் மீது வழக்கு

1

புதுடில்லி; தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அதிஷி மற்றும் ஆம் ஆத்மி தொண்டர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.



70 தொகுதிகளை கொண்ட புதுடில்லி சட்டசபைக்கு நாளை(பிப்.5) ஓட்டுப்பதிவு நடக்கிறது. பிரசாரம் முடிந்த நிலையில் ஓட்டுப் பதிவுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் அதிகாரிகளும், பாதுகாப்பு பணியில் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.


இந் நிலையில் கல்காஜி தொகுதிக்கு உட்பட்ட கோவிந்தபுரியில் ஆம் ஆத்மி வேட்பாளரும், முதல்வருமான அதிஷி, ஆதரவாளர்களுடன் சென்றதாக தெரிகிறது. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டோர் வாகனங்களில் சென்றதாக கூறப்படுகிறது.


இத்தகைய செயல் தேர்தல் நடத்தை விதிமீறல் என போலீசார் அறிவுறுத்தி, அனைவரும் கலைந்து செல்லுமாறு கூறி இருக்கின்றனர். அப்போது அங்கு இருந்த ஆம் ஆத்மி தொண்டர்கள் போலீசாரை தாக்கியதாக தெரிகிறது.


இந்த சம்பவத்தை தொடர்ந்து விதிகளை மீறியதாக அதிஷி மீதும், தலைமை காவலர் கவுஷல் பால் என்பவரை அடித்ததாக ஆம் ஆத்மி தொண்டர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


போலீசாரின் இந்த நடவடிக்கையையும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளையும் அதிஷி கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;


பா.ஜ., வேட்பாளர் ரமேஷ் பிதூரி, அவரின் குடும்பத்தினர் விதிகளை மீறி வருகின்றனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் என் மீது வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். நான் கொடுத்த புகார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.


இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.

Advertisement