அனைத்து பள்ளிகளிலும் காலநிலை கல்வி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

7


சென்னை: 'தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் சூழல் மண்டலங்கள் ஏற்படுத்தப்படும். காலநிலை கல்வி குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் காலநிலை உச்சி மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த மாநாடு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை சார்பில் 2 நாட்களுக்கு நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: காலநிலை மாற்த்தை எதிர்கொள்ளும் வகையில் நம்மை தகவமைத்துக் கொள்ளும் முயற்சியாக மாநாடு நடக்கிறது.
வயநாடு நிலச்சரிவு, திருவண்ணாமலை மண்சரிவுக்கும் காலநிலை மாற்றத்தையே காரணமாக சொல்ல வேண்டும். காலநிலை மாற்றத்தை மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.


காலநிலை கொள்கை




தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். உலக நாடுகள் பல்வேறு இயற்கைப் பேரிடர்களை சந்தித்து வருகின்றன. காலநிலை மாற்றத்தை கல்வி மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அரசு அலுவலர்களுக்கும் பயிற்சி வழங்கப்படும்.
காலநிலைக்கு என கொள்கை விரைவில் அறிவிக்கப்படும். மாணவர்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். வெப்ப அலையால் உயிரிழக்க நேரிட்டால் ரூ.4 லட்சம் நிவாரணம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

அக்கறை




காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவை எதிர்கொள்ள மக்கள் அது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். பொருளாதார மேம்பாடு, சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
வெப்ப நிலையை எதிர்கொள்ள ஓ.ஆர்.எஸ்., கரைசல், தண்ணீர்ப் பந்தல் அமைக்க மாநில பேரிடர் நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இயற்கை வளங்களைப் பாதுகாக்க அக்கறை கொண்ட சமூகமாக நாம் மாற வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement