கோவை, திருப்பூர் நகரங்களுக்கு 'விசிட்' அடித்த பயங்கரவாதி; என்.ஐ.ஏ., விசாரணையில் திடுக்கிடும் தகவல்

9

கோவை: ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதி அப்துல் பாசித் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு பலமுறை சென்று வந்தது உளவுத்துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.



சென்னை புரசைவாக்கத்தில் ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தில் அப்துல் பாசித் என்பவர் பணியாற்றி வந்தார். ஐ.எஸ்.ஐ.எஸ்., இயக்கத்தில் இளைஞர்களை சேர்த்ததாக அவரை சில நாட்கள் முன்பு தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ., கைது செய்தது.


விசாரணையில் அப்துல் பாசித் பலமுறை கோவை, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கு சென்று வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து மாநில உளவுத்துறை அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்த தகவல்கள் வருமாறு;


சோதனையில் சிக்கிய பொருட்கள், ஆவணங்கள் படி விசாரணை நடத்தப்பட்டது. தொடர் விசாரணையில் அப்துல் பாசித், பலமுறை கோவை மற்றும் திருப்பூர் நகரங்களுக்கு வந்து சென்றிருக்கிறார். பல்வேறு இடங்களில் தங்கி இருந்திருக்கிறார்.


இங்குள்ள இஸ்லாமிய இளைஞர்களிடம் பேசி அவர்களை ஐ.எஸ்.ஐ.எஸ்., இயக்கத்தில் சேர மூளைச்சலவை செய்தது தெரிய வந்திருக்கிறது. அவர் எத்தனை முறை வந்தார், யாரை சந்தித்தார், அந்த இளைஞர்கள் யார் என்பன பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.


3 ஆண்டுகளாக அப்துல் பாசித்துடன் பணியாற்றிய இளைஞர்கள் பற்றிய விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. என்.ஐ.ஏ.,வுடன், மாநில புலனாய்வு அமைப்புகளும் அதுபற்றிய விவரங்களை விசாரித்து வருகின்றன.


முன்னதாக, அப்துல் பாசித்துடன் தொடர்பில் இருந்த முகமது சாதிக் பாஷா, 2024ம் ஆண்டு பிப். மாதம் என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மயிலாடுதுறையில் உள்ள அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்திய என்.ஐ.ஏ., அமைப்பினர் செல்போன், பென் டிரைவ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொருட்களை கைப்பற்றினர்.


சாதிக் மற்றும் அவருடன் இருந்தவர்கள் ஐ.எஸ்.ஐ., கிலாபத் கட்சி, கிலாபத் முன்னணி ஆகியவற்றை உருவாக்கி, ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்கொய்தா அமைப்புடன் தொடர்பில் இருந்திருக்கின்றனர். அவர்கள் யார் என்பது பற்றியும் விசாரித்து வருகிறோம்.


இவ்வாறு அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Advertisement