திருப்பரங்குன்றம் விவகாரம்: மதுரை பழங்காநத்தத்தில் குவிந்த முருக பக்தர்கள்

75

மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இன்று மாலை 5 :00 மணி முதல் மாலை 6:00 மணிக்குள் மதுரை பழங்காநத்தம் பகுதியில் அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்த ஐகோர்ட் மதுரை கிளை அனுமதி வழங்கியது. இதனையடுத்து அங்கு திரளான முருக பக்தர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் முஸ்லிம்களின் தர்கா உள்ளது. தர்காவில் உயிர்பலி கொடுக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.இதனை கண்டித்து சில முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனை தொடர்ந்து இதனிடையே மலையை காக்க, இன்று (பிப்.,4) அறப்போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு மதுரை நகர போலீசார் அனுமதி மறுத்தனர். 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். இதனை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் இந்து முன்னணி சார்பில் வழக்கு தொரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, விழாக்காலமான பிப்., 11 வரை அனுமதி வழங்குவது கடினம் என அரசு தரப்பில் கூறப்பட்டு இருந்தது.

இதனை விசாரித்த ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இன்று மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை பழங்காநத்தம் பகுதியில் இந்து முன்னணி போராட்டம் நடத்தலாம். இதற்கு போலீசார் உரிய பாதுகாப்பைத் தர வேண்டும். பொது அமைதிக்கு பிரச்னை ஏற்படுத்தாத வகையில் ஆர்ப்பாட்டம் இருக்க வேண்டும். ஆர்ப்பாட்டம் நடத்துவது உரிமை என்றாலும், அது அரசியலமைப்புக்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஒரு மைக் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெறுப்பைத் தூண்டும் வகையிலான முழக்கங்கள் இருக்கக்கூடாது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்து உள்ளனர்.

திரண்ட பக்தர்கள்



இதனையடுத்து மதுரை பழங்காநத்தத்தில் ஏராளமான முருக பக்தர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement