தமிழக அரசுடன் கவர்னர் பேச வேண்டும்: சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி: '' இன்னும் 24 மணிநேரம் உள்ளதால், அரசியலமைப்பின்படி தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும்,'' என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
பல்கலை துணைவேந்தர் நியமனத்திற்கு கவர்னர் தடையாக இருப்பதாகவும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதாகவும் கூறி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சார்பில், 'மசோதா குறித்து முன்பே நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. எதுவும் நிலுவையில் இல்லை. துணைவேந்தர் நியமனத்தில் எதிர்தரப்பாக யு.ஜி.சி., சேர்க்கப்படாததால் விளக்கம் தர இயலாது', என விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழகஅரசு சார்பில் வாதாடுகையில், திருப்பி அனுப்பிய மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றினால் கவர்னர் ஒப்புதல் தர வேண்டும். 2020 ஜன.,13 முதல் ஏப்.,2023 வரை 12 மசோதாக்கள் அனுப்பப்பட்டன. தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களில் 2ஐ ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பினார். கவர்னரின் செயல்பாடுகளால் தமிழக அரசின் நிர்வாகத்திற்கு முட்டுக்கட்டை ஏற்படுகிறது. கவர்னர், சூப்பர் முதல்வராக செயலாற்ற முடியாது. ஒரே உரையில் இரு கத்திகள் இருக்க முடியாது.
பொதுப்பட்டியலில் உள்ள விவகாரங்கள் தொடர்புடைய மசோதாக்கள் மட்டுமே ஜனாதிபதியின் பரிசீலனைக்கு கவர்னர் அனுப்ப முடியும். அரசியலமைப்பிற்கு கவர்னர் உட்பட்டவர் தான். ஆனால், அவர் அப்படி செயல்படவில்லை. பல்கலைக்கு துணைவேந்தர் நியமிக்காத காரணத்தினால், பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. துணைவேந்தர் விவகாரத்தில் மாநில அரசை கவர்னர் பழிவாங்குகிறார்.
தண்டனை நிறுத்திவைக்கப்பட்டவருக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னர் மறுத்தார். கோர்ட் கண்டித்த நிலையில், பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அரசியலமைப்பு விதி 200ன் படி கவர்னர் செயல்பட வேண்டும் என உத்தரவிட வேண்டும் எனக்கூறப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெறுவதற்கான நடைமுறைகள் என்ன? கவர்னர் மசோதாக்களை திருப்பி அனுப்பியிருக்கக்கூடாது. ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பிவைத்த மசோதாக்கள் எவை. இதன் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை என்ன இம்மசோதாக்கள் மீது கவர்னரால் ஏன் முடிவெடுக்க முடியவில்லை. எதன் அடிப்படையில், மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார். கவர்னர் - அரசு மோதலால், மாநிலமும் மக்களும் பாதிக்கப்படுகின்றனர். 24மணி நேரத்தில் தமிழக அரசுடன் பேசி முடிவெடுக்கவேண்டும். தமிழக அரசை தேநீர் விருந்துக்கு அழைத்து கவர்னர் பேசலாம். எதன் அடிப்படையில் கவர்னர் எப்படி முடிவு எடுக்கிறார் எனக்கூற வேண்டும்.இந்த விவகாரத்தில் அரசியலமைப்பு விதிகளை உறுதி செய்வோம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து விசாரணையை நாளை மறுநாள்( பிப்.,6) ஒத்திவைத்தனர்.