இந்துாரை தொடர்ந்து போபால் நகரிலும் பிச்சை எடுக்க தடை
போபால்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்குப் பிறகு, போபால் நகரிலும் பிச்சை எடுப்பது, பிச்சை வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச முதல்வர் டாக்டர் மோகன் யாதவ் சமீபத்தில் முழு மாநிலத்தையும் பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம், வறுமையை ஒழிக்க அனைத்து வழிகளையும் முயற்சிப்போம் என்று கூறியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, இந்துார் நகரில் பிச்சை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது போபால் நகரிலும் இதேபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போபால் கலெக்டர் கௌஷலேந்திர விக்ரம் சிங் உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாவது:
போபால் மாவட்டத்திற்குள் எந்த வகையான பிச்சை எடுப்பதும் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. பிச்சை எடுப்பது ஒரு சமூக அச்சுறுத்தல்.
போபால் மாவட்டத்தில், பிற மாநிலங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்தவர்களும் இந்த வகையான பிச்சை எடுப்பதில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பலர் குற்றப்பின்னணி கொண்டவர்கள்.
போக்குவரத்து சிக்னல்களில் பிச்சை எடுப்பதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பிச்சை எடுப்பது மற்றும் கொடுப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.