ஏழைகள் வேதனையை எதிர்க்கட்சிகளால் புரிந்து கொள்ள முடியாது: பிரதமர் மோடி
புதுடில்லி: '' ஏழைகள் வேதனையை எதிர்க்கட்சிகளால் புரிந்து கொள்ள முடியாது. சொகுசு மாளிகைகளில் வசிக்கும் சிலர் ஏழைகளின் வீடுகளில் புகைப்படம் எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்துளளனர்,'' என பிரதமர் மோடி கூறினார்.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசியதாவது:
ஜனாதிபதி உரை மீது பதிலுரை வழங்குவதற்கு எனக்கு வாய்ப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாராட்டுகள், விமர்சனங்கள் முன் வைப்பது நமது ஜனநாயகத்தின் பாரம்பரியமாக திகழ்கிறது.
சில எதிர்மறை கருத்துகள் இந்த கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டுள்ளது. 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்டெடுக்கப்பட்டு பணக்காரர்களாக மாறி உள்ளனர். வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க அடுத்த 24 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது. 21ம் நூற்றாண்டில் நமது சாதனைகளை வரலாறு தீர்மானிக்கும்.
நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை சரி செய்ய அனுபவம் தேவை. சாமானிய, நடுத்தர மக்களை பா.ஜ., அரசு முன்னேற்றி உள்ளது. ஏழைகளின் நிலையை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். வீடு இல்லாதவர்களுக்கு 4 கோடி வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளோம்.
அவர்களுக்காக 12 கோடி கழிப்பறைகள் கட்டிக் கொடுத்துள்ளோம். மற்றவர்கள் ஏழைகளிடம் பொய் வாக்குறுதிகளை மட்டுமே வழங்கினர். மக்களுக்கு நாங்கள் ஒரு போதும் வெற்று முழக்கங்களை கொடுப்பதில்லை. நல்ல பல திட்டங்களை பா.ஜ., அரசு கொடுத்துள்ளது.
ஏழைகளுக்கு உண்மையான வளர்ச்சியை வழங்கி உள்ளோம். ஏழைகளின் நிலைகளை புரிந்து கொள்ள சிலருக்கு கடினமாக உள்ளது. மழைக்காலத்தில் ஏழைகள் வீடில்லாமல் அவதிப்படுவதை உணர்ந்துள்ளோம்.
இதுபோன்று சிலரால் உணர முடியாது. சில அரசியல் தலைவர்கள் சொகுசு குளியல் தொட்டி ஷவர்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். சொகுசு மாளிகைகளில் வசிக்க முக்கியத்துவம் தருகிறார்கள்.
சொகுசு மாளிகைகளில் வசிப்பவர்களுக்கு ஏழைகளின் வேதனை கேட்க பிடிக்காது. பொழுதுபோக்கிற்காக ஏழைகள் வீட்டில் சென்று புகைப்படம் எடுப்பவர்களுக்கு, ஜனாதிபதி உரையில் ஏழைகள் என குறிப்பிடுவது சுவாரஸ்யமாக இருக்காது.
ஏழைகளுக்காக அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஒவ்வொரு ஐந்தாண்டுகளிலும் வறுமை ஒழிந்துள்ளது. வறுமையை ஒழித்துள்ளோம். மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை கொண்டு சேர்ப்பதே அரசியல் கட்சிகளின் வேலை. கடந்த 10 ஆண்டுகளில் பல நல்ல திட்டங்களை பா.ஜ., அரசு மக்களிடம் கொண்டு சேர்த்து உள்ளது.
மக்களுக்கு நலத்திட்டங்கள் சென்றடைய ஏழைகளுக்கு வங்கிக்கணக்கு துவக்கப்பட்டுள்ளது. ரூ.40 லட்சம் கோடி பணம் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் ஏழ்மையை ஒழிப்போம் என்ற கோஷத்தை மட்டுமே கேட்டோம்.
தவறானவர்களின் கைகளுக்கு செல்லாமல் 3 லட்சம் கோடி ரூபாயை தடுத்துள்ளோம். தூய்மை இந்தியா திட்டத்தை சிலர் கேலி செய்தார்கள். இத்திட்டத்தில் கிடைத்த பழைய பொருட்களை விற்றதில் ரூ.2,300 கோடி கிடைத்தது.
முன்பு பிரதமர் ஆக இருந்த ஒருவர், டில்லியில் இருந்து ஒரு ரூபாயை அனுப்பினால் அடிமட்ட மக்களிடம் 15 பைசா மட்டுமே செல்கிறது என்ற ஒரு பிரச்னையை கண்டுபிடித்தார். அப்போது மத்தியிலும், மாநிலத்திலும், பஞ்சாயத்துகளிலும் ஒரு கட்சி மட்டுமே ஆட்சி செய்தது. அந்த பிரச்னைக்கான தீர்வை நாங்கள் தான் கண்டுபிடித்தோம்.
இப்போது வெளிப்படைத்தன்மையை கொண்டு வர டிஜிட்டல் பயன்படுத்தப்படுகிறது. அரசியல் லாப நோக்கங்களை கருத்தில் கொள்ளாமல், அரசு திட்டங்களில் இருந்து 10 கோடி போலி பயனர்கள் நீக்கப்பட்டனர். ஜன்தன், ஆதார், மொபைல் மூலம் நேரடி மானியம் வழங்குவதை துவக்கினோம்.
முந்தைய அரசுகள் ஊழலில் திளைத்து போயிருந்தன. முந்தைய காலங்களில் ஊழல் குறித்த விஷயங்கள் தலைப்புச் செய்தியாக வந்தது.
ஆனால், இன்று ஊழல் இல்லாத காரணத்தினால் கோடிக்கணக்கான பணம் சேமிக்கப்படுகிறது. நாங்கள் சொகுசு மாளிகை கட்ட மக்களின் பணத்தை பயன்படுத்தவில்லை.
கடந்த 10 ஆண்டுகளில் மத்தியில் எந்த ஊழலும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்துள்ளோம். தே.ஜ., கூட்டணி ஆட்சியில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அதிக நிதிஒதுக்கப்படுகிறது. வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை நாம் அமைத்துள்ளோம். வரியை குறைத்து நடுத்தர மக்களின் சேமிப்பை அதிகரித்து உள்ளோம். இனிமேல் ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.