காலிறுதியில் இந்திய ஜோடி * சென்னை சாலஞ்சர் டென்னிசில்...
சென்னை: சாலஞ்சர் டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் சோமானி, சித்தாந்த் ஜோடி முன்னேறியது.
சென்னையில் ஆண்களுக்கான சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சித்தாந்த், பரிக்சித் சோமானி ஜோடி, இந்தியாவின் விஷ்ணுவர்தன், சாய் கார்தீக் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை சித்தாந்த்-சோமானி ஜோடி 6-3 என கைப்பற்றியது. அடுத்த செட்டை 3-6 என கோட்டை விட்டது. வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த 'சூப்பர் டை பிரேக்கரில்' சித்தாந்த்-சோமானி ஜோடி 10-7 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம், 33 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சித்தாந்த்-சோமானி ஜோடி 6-3, 3-6, 10-7 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
ராமநாதன் ஏமாற்றம்
ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், பிரிட்டனின் ஜெய் கிளார்க் மோதினர். இதில் ராமநாதன் 3-6, 5-7 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் கரண் சிங், 3-6, 3-6 என பிரான்சின் ஜாக்குயட்டிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் சசிக்குமார் முகுந்த், 3-6, 7-6, 1-6 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் ஜகரோவிடம் போராடி வீழ்ந்தார்.