மணமகன் மாயம்: நின்றது திருமணம்
பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே திருமண நாளன்று மணமகன் வராத நிலையில் போலீசார் அவரை தேடுகின்றனர்.
பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயது பெண்.
இவருக்கும் பரமக்குடி பொன்னையாபுரத்தை சேர்ந்தவர் கட்டட பணி செய்யும் தொழிலாளிக்கும் இரண்டு மாதங்களுக்கு முன் இருவீட்டார் முன்னிலையில் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது.
தொடர்ந்து பத்திரிக்கை அச்சடித்து அனைத்து ஏற்படும் நடந்த நிலையில் ஜன.29ல் திருமணம் செய்ய பிடிக்கவில்லை என தொழிலாளி கூறியதால் பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது இரு வீட்டாருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு திருமணம் செய்ய ஒப்புக்கொண்டனர். இதையடுத்து நேற்று முன்தினம் மேலப் பெருங்கரை அட்டாள சொக்கநாதர் கோயிலில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உணவுகள் அனைத்தும் தயார் செய்து மணப்பெண் வீட்டார் மணமகளுடன் காத்திருந்தனர்.
நீண்ட நேரம் ஆகியும் மணமகன் உட்பட அவரது வீட்டார் யாரும் வராததால் திருமண ஆசை காட்டி அனைத்து ஏற்பாடுகளும் நடந்த நிலையில் தன்னை ஏமாற்றியதாக மீண்டும் போலீஸ் ஸ்டேஷனில் மணப்பெண் புகார் அளித்துள்ளார். பரமக்குடி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாரதா, மணமகனை தேடுகிறார்.