பாரத கலாசார பாரம்பரிய மேம்பாட்டு இளைஞர் முகாம்
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கல்வியியல் கல்லூரியின் சார்பில், 'யுவ சன்ஸ்க்ருதி' என்ற தலைப்பில் மூன்று நாள் பாரத கலாசார, பாரம்பரிய மேம்பாட்டு இளைஞர் முகாம் நடந்தது.
இந்நிறுவனத்தின் கல்வியியல் கல்லுாரியின், 75ம் ஆண்டு விழாவை ஒட்டி இந்நிகழ்ச்சி நடந்தது. ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை வைத்தார். உதவி செயலாளர் சுவாமி தத்பாஷானந்தர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
முகாமில், சேலம் சாரதா கல்வியியல் கல்லூரி, ராசிபுரம் வித்யா மந்திர் கல்வியியல் கல்லூரி, நாமக்கல் கொங்குநாடு ஒருங்கிணைந்த கல்வியியல் கல்லூரி, ஈரோடு வெள்ளாளர் மகளிர் கல்வியியல் கல்லூரி, கோவை ஹிந்துஸ்தான் கல்வியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளை சேர்ந்த, 160 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
முகாமில், நல்ல சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு, நவீன கற்பித்தல் முறைகள், இந்திய விடுதலை போராட்ட வரலாறு, தமிழ் இலக்கியங்களில் கல்வி சிந்தனை, யோகா பயிற்சிகள், மதிப்பு கல்வியோடு இணைந்த விளையாட்டுக்கள் உள்ளிட்டவை வெவ்வேறு கருத்தாளர்களால் கற்பிக்கப்பட்டன.
முகாமில், பட்டிமன்றம், புதுமையான கற்பித்தல் முறைகள் என்ற தலைப்பில் போட்டிகள் நடந்தன.