கைதானவர்கள் விபரம் சமர்ப்பிக்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவு திண்டுக்கல்லில் 34 மணி நேரத்திற்கு பின் விடுவிப்பு

திண்டுக்கல்:திண்டுக்கல்லிலிருந்து திருப்பரங்குன்றம் அறப்போராட்டத்திற்கு செல்ல முயன்ற ஹிந்து முன்னணி, பா.ஜ., உள்ளிட்ட பல அமைப்பினரை நேற்று முன் தினம் போலீசார் கைது செய்து திருமண மண்டபங்கள், போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் அடைத்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு செய்யப்பட்ட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை தெரிவிக்க திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் (எண் 1) வழக்கறிஞர் ஆணையருக்கு உத்தரவிட்டது. அவர் அறிக்கை சமர்ப்பித்த நிலையில் 34 மணி நேரத்திற்கு பிறகு கைதான 50க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டனர்.

திருப்பரங்குன்றத்தில் ஹிந்து முன்னணி சார்பில் நேற்று அறப்போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து ஏராளமான பா.ஜ., ஹிந்து முன்னணி, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்பினர் அங்கு செல்ல தொண்டர்களை திரட்டினர்.

இதையறிந்த போலீசார் நேற்று முன்தினம் காலை முதல் போராட்டத்திற்கு தொண்டர்களை திரட்டிய பா.ஜ., ஹிந்து முன்னணி, சிவசேனா உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 100க்கு மேலானவர்களை விசாரணை என்ற பெயரில் வீட்டுச்சிறை, திருமண மண்டபங்கள், போலீஸ் ஸ்டேஷன்களில் கைது செய்து அடைத்தனர். இரவு வரை போலீசார் அவர்களை விடுவிக்கவில்லை.

அவர்களை கைது செய்த விவரங்களை அவர்களது குடும்பத்தினருக்கும் தெரிவிக்கவில்லை.

அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என பா.ஜ., ஹிந்து முன்னணி சார்பில் வழக்கறிஞர் மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்( எண் 1) மனு செய்தார்.

விசாரித்த நீதிபதி சவுமியா மேத்யூ, இதுதொடர்பாக விசாரிக்க வழக்கறிஞர் ஆணையர் செல்வராஜை நியமித்தார். போராட்டத்திற்கு செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டிருப்பவர்கள் இருக்கும் இடங்களுக்கு நேரில் சென்று அவர்கள் கூறும் பிரச்னைகள், நடந்த உண்மைகளை அறிக்கையாக சமர்பிக்கவும் உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று காலை திண்டுக்கல் மேற்கு, தாலுகா, வடக்கு போலீஸ் ஸ்டேஷன்களில் ஆய்வுக்கு சென்ற வழக்கறிஞர் ஆணையர் செல்வராஜ், போலீசார் விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்கவில்லை.

சிலர் போலீஸ் ஸ்டேஷனில் சம்பந்தபட்ட அதிகாரிகள் இல்லை. கைது செய்யப்பட்டிப்பவர்களுக்கு சாப்பாடு வழங்கவில்லை. அவர்கள் கைது குறித்து குடும்பத்தினருக்கும் தெரிவிக்கவில்லை.

வழக்கு பதிவு செய்ததும் கைது செய்யப்பட்டிருப்பவர்களுக்கு தெரிவிக்கவில்லை என நீதிபதி சவுமியா மேத்யூ, முன் அறிக்கையாக சமர்பித்தார். அதையடுத்து கைதான அனைவரையும் விடுவிக்க போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

திண்டுக்கல் நகர் பகுதியில் கைதான 50க்கும் மேற்பட்டோர் 34 மணி நேரத்திற்கு பின் விடுவிக்கப்பட்டனர்.

இப்பிரச்னை தொடர்பாக 110 பேர் மீது மாவட்டம் முழுவதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Advertisement