அனுமதியற்ற 150 கிரஷர்களில் தரமற்ற எம் - சாண்ட் விற்பனை? கட்டடங்களின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறி
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 162 எம் - -சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும், அதில், 150 கிரஷர்கள் அரசின் அனுமதியின்றி செயல்படுவதாகவும், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.
இதுகுறித்து, மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 162 கிரஷர்களில், 12 நிறுவனங்களே அனுமதி பெற்றுள்ளன; 150 அனுமதி பெறவில்லை. இவை, தரமற்ற முறையில் எம் - -சாண்டை உற்பத்தி செய்வதால், கட்டடங்களின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது.
அதனால், அனுமதியற்ற கிரஷர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர், கனிமவளத் துறை, பொதுப்பணி துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
சரியான சட்டத்திட்டங்கள் இங்கு இல்லை. தரமற்ற பொருட்களால் கட்டட பாதிப்பு ஏற்பட்டால், யார் பொறுப்பேற்பர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனுமதியற்ற கிரஷர்களை உடனடியாக மூட, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உட்பட பல துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.