ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்துடன் கோவை இளைஞர்களுக்கு தொடர்பா

கோவை:ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்துடன் கோவை இளைஞர்களுக்கு தொடர்பு உள்ளதா என, தேசிய புலனாய்வு நிறுவனமான, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

தமிழகத்தில், தடை செய்யப்பட்டுள்ள ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்களை சேர்ப்பதாக, என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. ஜனவரி, 28 அன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், சென்னை புரசைவாக்கத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்த அப்துல் பாசித் என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் என்பதும், சென்னையில் இருந்து கொண்டே ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்க்க, பல மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களை, மூளைச்சலவை செய்ததும் தெரிந்தது.

இதற்காக அவர் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு, பலமுறை வந்து சென்றதும், இங்கு சில நாட்கள் தங்கியிருந்து, இங்குள்ள இஸ்லாமிய இளைஞர்களை, பயங்கரவாத இயக்கத்தில் சேர, மூளைச்சலவை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கோவைக்கு பாசித் எப்போது வந்தார்; எங்கு தங்கியிருந்தார்; யார் யாரை சந்தித்து பேசினார் என்பது குறித்த விபரங்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

Advertisement