டூ-வீலர்கள் மோதியதால் தப்பியது ரூ.36 லட்சம்
திருப்பத்துார்:ஜோலார்பேட்டை அருகே, வங்கி ஏ.டி.எம்., மையத்தில் பணம் நிரப்ப வந்த ஊழியர்களிடம், 36 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து பைக்கில் தப்பியபோது, விபத்து ஏற்பட்டதால், பணப்பையை அங்கேயே போட்டுவிட்டு ஓடிய, இரண்டு கொள்ளையர்களை போலீசார் தேடுகின்றனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பாரத ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்., மையத்தில், பணம் நிரப்ப நேற்று முன்தினம் மாலை, தனியார் நிறுவன ஊழியர்கள், 36 லட்சம் ரூபாய் எடுத்து வந்தனர். இரு ஊழியர்கள் பணப்பையுடன் ஏ.டி.எம்., மையத்திற்குள் நுழைய முயன்றபோது, அவர்களிடமிருந்து இரண்டு வாலிபர்கள் பணப்பையை பறித்து கொண்டு, பைக்கில் தப்ப முயன்றனர்.
அப்போது எதிரே மற்றொரு பைக் திடீரென வந்ததில், அதன் மீது கொள்ளையர்கள் ஓட்டி வந்த பைக் மோதியது. கொள்ளையர்கள் இருவரும் நிலை தடுமாறி விழுந்தனர். பணப்பை சற்று தொலைவில் விழுந்தது. பணம் நிரப்ப வந்த ஊழியர்கள் அலறி கூச்சலிட்டனர். ஏ.டி.எம்., மைய காவலாளி, கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது, அவர்கள் பைக் மற்றும் பணப்பையை அங்கேயே போட்டு விட்டு தப்பியோடினர்.
இது குறித்து, ஏ.டி.எம்., மைய காவலாளி தண்டபாணி புகார் படி, ஜோலார்பேட்டை போலீசார், அங்குள்ள, 'சிசிடிவி' காட்சி மூலம், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.