ஓராண்டில் பெயர்ந்து விழுந்த பஸ் ஸ்டாப்
கொட்டாம்பட்டி: கம்பூர் பஸ் ஸ்டாப் கூரையின் சிமென்ட் பூச்சு பெயர்ந்து பயணி மீது விழுந்ததால் ஓட்டம் பிடித்து உயிர்தப்பினார்.
கம்பூரில் அரசு பள்ளியின் முன்புறம் எம்.பி., நிதியில் ரூ. 5 லட்சத்தில் 2024 பிப்ரவரியில் பஸ் ஸ்டாப் கட்டப்பட்டது. ஓராண்டுக்கு முன் வெங்கடேசன் எம்.பி., திறந்து வைத்தார். நேற்று மதியம் பஸ் ஸ்டாப்பில் பயணிகள் அமர்ந்திருந்த போது கூரையின் சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. பயணிகள் அலறி அடித்து வெளியே ஓடினர். சிமென்ட் காரை விழுந்ததில் பயணி ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
பயணி மூக்கையா கூறுகையில், ''திடீரென சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழவே வெளியே ஓடியதால் சிறிய காயத்துடன் தப்பினேன். திறப்பு விழா முடிந்து ஓராண்டுகூட முடியாத நிலையில், மேற்கூரை பெயர்ந்து விழுகிறது என்றால் அதன் தன்மையை அறியலாம்.
தரமற்ற வேலையால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. எந்நேரமும் பயணிகள், மாணவர்கள் கூட்டம் அதிகம் உள்ள பஸ் ஸ்டாப் மேலும் சேதமடைந்து விபரீதம் விளையும் முன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.