134 ஆண்டு பாலம் சேதம் குவாரி லாரிகளுக்கு '144' வேண்டும்

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே அய்யனகவுண்டன்பட்டியில் 134 ஆண்டுகள் பழமையான பாலம் குவாரி லாரிகளால் சேதமடைந்துள்ளது.

இங்குள்ள பெரியாறு பாசன கால்வாயில் 1891ல் கர்னல் பென்னி குயிக் கட்டிய பாலம் உள்ளது. வகுத்து மலை, வண்ணாத்தி கரடு பகுதி மழைநீர் பாசன கால்வாயை மேலாக கடந்து செல்ல ஓடை பாலத்தில் இப்பகுதி குவாரி லாரிகள் அதிக எடையுடன் சென்று வருகின்றன.

இதனால் பாலத்தின் நடுவே தரை தளத்தில் பதிக்கப்பட்ட பட்டியல் கற்கள் பெயர்ந்துள்ளது. இந்த துளைகள் வழியாக பாசனநீர் பாலத்தின் மேல் ஊற்று எடுத்து தேங்குகிறது. இந்த பாலம் உடைந்த பகுதியை தவிர்த்து ஓரமாக லாரிகள் செல்கின்றன.இதனால் பாலம் மேலும் வலுவிழந்து வருவதால் லாரிகள் செல்ல தடை செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஸ்ரீகாந்த்: சிறு கனிம சலுகை விதியின்படி ஓடை மற்றும் வாய்க்கால் போன்ற நீர் நிலைகளில் இருந்து 50 மீ.,இடைவெளி விட்டு குவாரிப் பணிகள் செய்ய வேண்டும். அரசு விதிகளை மீறி பாசன ஓடையை வழித்தடமாக பயன்படுத்துகின்றனர். கால்நடை மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் குவாரி ஆக்கிரமிப்பில் உள்ளது. லாரிகளால் பாலம் உடைந்துள்ளது. லாரிகள் செல்ல தடை விதிக்க வேண்டும் என கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். நீர்வளத்துறை அதிகாரிகள் பாலத்தை பராமரித்து, பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement