காதலியுடன் பழகிய வீடியோ வெளியிடுவதாக மிரட்டல்; டிரைவரை கொன்ற ரவுடி வாக்குமூலம்; பெண்ணும் கைது
சேலம்: காதலியுடன் பழகி வீடியோ எடுத்து மிரட்டியதால், சரக்கு வேன் டிரைவரை கொன்றதாக, ரவுடி வாக்குமூலம் அளித்தார். ரவுடியின் காதலியையும் போலீசார் கைது செய்தனர்.
சேலம், வீராணம், வீமனுார் காட்டுவளவை சேர்ந்தவர் குமரவேல், 29. சரக்கு வேன் டிரைவரான இவர், நேற்று முன்தினம் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வீராணம் போலீசார் விசாரித்து, மணியனுாரை சேர்ந்த ரவுடி பிரகாஷ், 38, உள்பட, 3 பேரை கைது செய்தனர்.
பிரகாஷ், போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்:
கணவரை பிரிந்து வந்த, அதே பகுதியை சேர்ந்த வசந்தியுடன் நெருங்கி பழகினேன். தொடர்ந்து போதைப்பொருள் விற்பனை வழக்கில் கைதாகி, சிறையில் இருந்தபோது, நண்பர் குமரவேல், வசந்தியுடன் பழகி வீடியோ எடுத்துள்ளார். நான் வெளியே வந்ததும், வசந்தியுடன் பழகுவதை கைவிடும்படி குமரவேலிடம் கூறினேன். அவர் கேட்கவில்லை.
வீடியோவை வைத்து வசந்தியை மிரட்டினார். வசந்தி அழுதார். குமரவேல் யாரிடமும் சொல்லாமல் இருக்க, ஏதாவது செய்ய வேண்டும் என்றார். இதனால் குமரவேலை சந்தித்து வீடியோவை அழிக்கும்படி கூறினேன். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக கூறினார். நிறைய வீடியோ இருப்பதாகவும் தெரிவித்தார்.
குமரவேல் உயிருடன் இருந்தால் இன்னும் பிரச்னை தான் என, அவரை கொல்ல முடிவு செய்தேன். முனியப்பன் கோவில் அருகே மது அருந்திக்கொண்டிருந்தபோது, நண்பர்கள் மாணிக்கம், கனகராஜூடன் சென்று, குமரவேலை எச்சரித்தேன். வசந்தி கூறியதுபோல், அவரது மொபைல் போனை வாங்கி உடைத்தேன். தொடர்ந்து நண்பர்களுடன் சேர்ந்து, கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றேன். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து போலீ சார், வசந்தியையும் கைது செய்தனர்.