ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பர் சாந்தனு நாயுடுவுக்கு டாடா மோட்டார் நிறுவனத்தில் உயர் பதவி
மும்பை: மறைந்த தொழில் அதிபர் ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பர் சாந்தனு நாயுடு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பொது மேலாளராக பொறுப்பேற்றார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 9ம் தேதி பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, 86, உடல்நலக்குறைவால் காலமானார். சாந்தனு நாயுடு என்பவர் ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பர். இவர் தன்னுடைய வித்தியாசமான அணுகுமுறையால் டாடாவால் ஈர்க்கப்பட்டார். இன்ஜினியரிங் முடித்து விட்டு, இன்டர்னாக டாடா குழுமத்தில் சாந்தனு நாயுடு இணைந்தார். தற்போது அவர் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பொது மேலாளராக பதவி உயர்வு பெற்றார்.
பழைய நினைவுகள்!
இது குறித்து, 32 வயதான சாந்தனு நாயுடு கூறியதாவது: டாடா மோட்டார்ஸில் பொது மேலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். என் அப்பா டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் இருந்து பணி முடிந்து வீட்டிற்கு நடந்து வந்தது எனக்கு நினைவிருக்கிறது. நான் அவருக்காக ஜன்னலில் காத்திருப்பேன் என பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
யார் இந்த சாந்தனு நாயுடு?
* 2018ம் ஆண்டில், சாந்தனு நாயுடு ரத்தன் டாடாவின் உதவியாளராகப் பணியாற்றத் தொடங்கினார்.
* டாடா சன்ஸ் நிறுவனத்தில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி உள்ளார்.
* இவர் 2014ம் ஆண்டு தான் முதன்முதலில் ரத்தன் டாடாவின் கவனத்தை ஈர்த்தார்.
* ரத்தன் டாடாவுக்கு நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகள் மீது அளவு கடந்த பாசம் உண்டு. குறிப்பாக நாய்கள் மீது ரத்தன் டாடா அதிகம் அன்பு கொண்டவர்.
* சாந்தனு நாயுடு நாய்களுக்கு காலர் ஒன்றை வித்தியாசமான முறையில் வடிவமைத்து ரத்தன் டாடா மனதில் இடம் பிடித்தார்.