ஓட்டுப்பதிவை அதிகரிக்க தேர்தல் அலுவலர்கள் கடும் முயற்சி
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று ஓட்டுப்பதிவு நடக்க உள்ள நிலையில், மாவட்ட தேர்தல் அலுவலகம் மூலம், கூடுதலான ஓட்டுப்பதிவு நடக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்படி தொகுதியில் அரசு, தனியார் நிறுவனங்கள், கடைகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டு, வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடைகள், நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. தொகுதிக்கு உட்பட்ட, 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஓட்டை ஓட்டுச்சாவடிக்கு சென்று செலுத்த வாகன வசதி செய்யப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் வாகன வசதி, 3 சக்கர வண்டி தேவைப்படின், தேர்தல் ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட SAKSHAM APPல் விண்ணப்பித்து பெறலாம்.
தேர்தலுக்காக, 3ம் தேதி காலை, 10:00 மணி முதல், ஓட்டுப்பதிவு முடிந்து நள்ளிரவு, 12:00 மணி வரை மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்கப்படுகிறது. இதன் மூலம் ஓட்டுப்பதிவை, 100 சதவீதம் நிறைவேற்ற மாவட்ட தேர்தல் அலுவலகம் திட்டமிட்டுள்ளது.