காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும்; இஸ்ரேல் பிரதமரை சந்தித்த டிரம்ப் திட்டவட்டம்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகிய இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். பின்னர், 'காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும்' என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், கடந்த ஜனவரி 20ல் அதிபராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற உடன், 'தான் அதிபராக இருந்தால், உலகில் போர் நடக்க விட மாட்டேன்' என டிரம்ப் கூறியிருந்தார். இதற்கிடையே, தங்கள் நாட்டிற்கு வருமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்தார்.
அந்த அழைப்பை ஏற்று, பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்கா வந்தடைந்தார். பின்னர் வெள்ளை மாளிகையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகிய இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். அவர்கள் இருவரும் போர் நிறுத்தம், இரு தரப்பு உறவு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர், இஸ்ரேல் பிரதமர், டிரம்ப் இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது, டிரம்ப் கூறியதாவது: தேவைப்பட்டால் காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும். அப்பகுதியில் எங்கள் நாட்டு ராணுவத்தினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவோம்.
இது மத்திய கிழக்கு பகுதியில் அமைதி சூழலை உருவாக்கும். காசா பகுதியில் உள்ள வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை அகற்றுவோம். அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்புகள் மற்றும் வீடுகள் ஆகியவற்றை உருவாக்குவோம். இவ்வாறு டிரம்ப் கூறினார்.
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: அதிபர் டிரம்பின் யோசனை வரலாற்றை மாற்றக்கூடிய ஒன்று. காசாவிற்கு ஒரு வித்தியாசமான எதிர்காலத்தைக் கற்பனை செய்கிறார். மத்திய கிழக்கின் புவிசார் அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும், என்றார்.