தாய்மொழியில் எழுதத் தெரியாத அமைச்சர்; கர்நாடகாவில் ஒரு சம்பவம்

பெங்களூரு; கர்நாடகாவில் அமைச்சர் ஒருவர் தாய்மொழி தெரியாமல் அருகில் நிற்பவரிடம் கேட்டு கேட்டு கரும்பலகையில் எழுதிய சம்பவம் விமர்சனமாகி இருக்கிறது.



கர்நாடகாவில் கலாசார அமைச்சராக இருப்பவர் சிவராஜ் தங்காதேகி. கொப்பல் மாவட்டம் கரடாகி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை அவர் திறந்து வைத்தார். பின்னர், அங்குள்ள கரும்பலகை ஒன்றில் சுபவாகிலி (தமிழில் வாழ்த்துகள் என அர்த்தம்) என்று கன்னடத்தில் எழுத ஆரம்பித்தார்.


ஒருசில வார்த்தைகள் மட்டுமே எழுதிய அவர், திடீரென தடுமாறினார். வார்த்தைகளை எழுத தெரியாமல் திணறிய அமைச்சர் சிவராஜ், பின்னர் அருகில் நின்றவர் ஒவ்வொரு வார்த்தையாக கூற, அதை கேட்டுக் கேட்டு எழுதினார்.


இந்த சம்பவத்தை அங்குள்ள ஒருவர் வீடியோவாக படம்பிடிக்க, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. மாநில அமைச்சர் ஒருவரே தாய்மொழியான கன்னடம் எழுத தெரியாமல் தடுமாறுவதா என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன.


அமைச்சரின் இந்த செய்கைக்கு பா.ஜ.,வும் கடும் கண்டனத்தை முன் வைத்துள்ளது. விமர்சனத்துக்கு ஆளான அமைச்சர் சிவராஜ் தங்காதேகி ஒரு பிஎஸ்சி பட்டதாரி, 3 முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement