இது எனக்கு கிடைத்த பாக்கியம்; திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் மோடி பெருமிதம்
லக்னோ: உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடக்கும் மஹா கும்பமேளாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, இன்று (பிப்., 05) திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். மகா கும்பமேளாவில் பங்கேற்றது எனக்கு கிடைத்த பாக்கியம் என சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
உ.பி.,யின் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மஹா கும்பமேளா நிகழ்வு, ஜன., 13ல் துவங்கியது. பிப்., 26ம் தேதி வரை இந்த நிகழ்வு நடக்கவுள்ள நிலையில், இதுவரை 32 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.
இந்நிலையில், இன்று (பிப்., 05) மஹா கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜுக்கு பிரதமர் மோடி வந்தார். திரிவேணி சங்கமத்தில், அவர் புனித நீராடினார். முன்னதாக மோட்டார் படகில் கும்பமேளா நடக்கும் இடத்தில், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் பார்வையிட்டார்.
தொடர்ந்து, அவர் பிரயாக்ராஜில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டார்.
பக்தி உணர்வால் நிறைந்தேன்!
கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்ற, புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதாவது: கும்பமேளாவில் கோடிக்கணக்கான மக்களைப் போல நானும் பக்தி உணர்வால் நிறைந்தேன்.
மகா கும்பமேளாவில் பங்கேற்றது எனக்கு கிடைத்த பாக்கியம். கும்பமேளாவில் நீராடியதை தெய்வீக இணைப்பின் ஒரு தருணமாக உணர்ந்தேன். கங்கை அனைவருக்கும் அமைதி , ஞானம், ஆரோக்கியம், நல்லிணக்கத்தை தரட்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.