காலி மது பாட்டில் திரும்பப்பெறும் திட்டம் ஏப்ரலில் அமல்; ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி
சென்னை: 'தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் நடைமுறை ஏப்ரல் முதல் அமலுக்கு வரும்' என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி, காலி மதுபாட்டில்களை கடைகளிலேயே திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த, டாஸ்மாக், 2022ல் முடிவு செய்தது. தற்போது, இத்திட்டம் ஒன்பது மாவட்டங்களில் முழுதுமாகவும், ஏழு மாவட்ட மலை பகுதிகளிலும் செயல்பாட்டில் உள்ளது.
இங்குள்ள கடைகளில் மதுபாட்டில் விற்கப்படும் போது, கூடுதலாக, 10 ரூபாய் சேர்த்து வசூலிக்கப்படும். காலி பாட்டிலை கடைகளில் வழங்கியதும், 10 ரூபாய் திரும்ப வழங்கப்படுகிறது. இத்திட்டம், 38 மாவட்டங்களிலும் முழுதுமாக செயல்படுத்தப்பட உள்ளது.
இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்கும் காலி மது பாட்டில்கள், ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக சேகரிக்கப்படும். இந்த பணிக்கு, தகுதியான ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, மாவட்ட வாரியாக டாஸ்மாக் நிறுவனம், 'டெண்டர்' கோரி இருந்தது. இது தொடர்பான வழக்கு இன்று (பிப்.,05) சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் நடைமுறை ஏப்ரல் முதல் அமலுக்கு வரும்' என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.