திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கு: லண்டன் பிரிவி கவுன்சில் தீர்ப்பு விபரம் இதோ!
சென்னை: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலை தொடர்பான விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பான பிரச்சனையை நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னதாகவே, லண்டன் பிரிவி கவுன்சில் விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
முதலில் இந்த வழக்கு மதுரை கீழமை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில், விவசாயம் செய்யப்படும் ஒரு பகுதி நிலம், தர்கா அமைந்துள்ள பகுதி ஆகியவை தவிர மொத்த மலையும் கோவில் சொத்து என்று வலியுறுத்தப்பட்டது. முஸ்லிம்கள் தரப்பில் தர்கா அமைந்துள்ள பகுதியும், நெல்லித்தோப்பு என்று அழைக்கப்படும் மலையின் ஒரு பகுதியும் தங்களுக்குச் சொந்தம் என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மதுரை கீழமை நீதிமன்றம் 1923ம் ஆண்டு ஆகஸ்டில் கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை அரசு தரப்பும், கோவில் தரப்பும் ஏற்றுக் கொண்டனர். ஆனால் முஸ்லிம்கள் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். 1926ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், முஸ்லிம்களின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது. ஆனால் மலை முழுவதும் அரசுக்கு சொந்தம் என்று தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து லண்டன் பிரிவி கவுன்சிலில் கோவில் தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த பிரிவி கவுன்சில் 1931ல் விரிவான உத்தரவை பிறப்பித்தது. மதுரை கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவே சரியானது என்பது தான் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவு. திருப்பரங்குன்றம் கோவிலின் வரலாற்றை விரிவாக ஆராய்ந்த பிரிவி கவுன்சில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தைய பல்வேறு ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு வழங்கியது.
கோவில் தேரோட்டம் நடக்கும் வீதி கிரி வீதி என்று அழைக்கப்படுவதை குறிப்பிட்டும், பல்வேறு ஆவணங்களில் இதை மலை பிரகாரம் என்று குறிப்பிட்டுள்ளதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். கிரிவீதியில் சிறிய கோவில்கள் பலவும் அமைந்துள்ளன. பழங்கால மண்டபங்கள் அல்லது பக்தர்களுக்கான ஓய்வு விடுதிகள் அமைந்துள்ளன. இந்த கோவில்கள் அனைத்தும் பழமை வாய்ந்தவை. 13ம் நூற்றாண்டு அல்லது அதற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவை.
இந்திய தொல்லியல் துறையின் தலைவர் கொடுத்துள்ள அறிக்கையில், மலை முழுவதையும் சிவலிங்கமாக பக்தர்கள் வழிபட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இத்தகைய தனித்துவம் வாய்ந்த வழிபாடு மதுரையில் தொடங்கி இருக்க வேண்டும் என்றும் நம்புவதற்கு ஆதாரங்கள் உள்ளன என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். பழைய ஆவணங்கள் பலவற்றில் இந்த மலையை சுவாமிமலை என்று குறிப்பிட்டுள்ளனர் என்றும் பிரிவி கவுன்சில் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவில் நிர்வாகத்தினர் நூறாண்டுகளுக்கு மேலாக இந்த மலையை சொந்தம் கொண்டாடும் வகையில், பாதுகாத்து பராமரித்து வந்துள்ளனர் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. சுவாமி தேரோட்டம் நடக்கும் கிரி வீதியை அகலப்படுத்த ஒரு வீட்டுமனையை விலை கொடுத்து வாங்கியுள்ளனர் என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன. இதற்கான ஆதார ஆவணங்கள் 1835ம் ஆண்டு முதல் உள்ளன. 1861ம் ஆண்டு மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்பட்டதற்கான புகார் ஒன்று மதுரை மாவட்ட கலெக்டர் இடம் அளிக்கப்பட்டது.
அப்போது, ' மலை முழுவதும் கோவிலுக்கு சொந்தமானது என்பதால் மரங்கள் தொடர்பான விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று தாசில்தாருக்கு கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். கோவில் நிர்வாகத்தினர், பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதையும், அதை அவ்வப்போது பராமரித்து சரி செய்வதையும் தொடர்ந்து செய்து வந்துள்ளனர். பல இடங்களில் சிறு பாலங்கள், மண்டபங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களையும் செய்துள்ளனர்.
இந்த ஆதாரங்கள் அனைத்தும், கோவில் நிர்வாகத்தின் உரிமை மற்றும் பொறுப்பில் மலை இருந்ததற்கான ஆதாரங்கள் என்று கருதியே கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்று பிரிவி கவுன்சில் சுட்டிக்காட்டி உள்ளது. அதன் அடிப்படையில் தான், மதுரை கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்வதாக தெரிவித்துள்ள லண்டன் பிரிவி கவுன்சில், கீழமை நீதிமன்ற உத்தரவை மாற்றுவதற்கு எந்த அவசியமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
கோவில் அமைந்துள்ள மலை, எல்லா காலத்திலும் கோவில் நிர்வாகத்தினர் வசமே இருந்துள்ளது என்பதும் ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரிவி கவுன்சில் தெரிவித்துள்ளது. புறம்போக்கு நிலம் என்பது பிரிட்டிஷ் அரசுக்கு சொந்தமானது என்பது பொதுவான கருத்து. ஆனாலும் இந்த வழக்கை பொறுத்த வரை, குறிப்பிட்ட அந்த நிலம் முழுவதும் கோவிலுக்கு சொந்தமானது என்று பிரிவி கவுன்சில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பிரிவி கவுன்சில் என்பது என்ன?
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், மன்னருக்கு ஆலோசனை வழங்குவதற்காகவும், வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்காகவும் லண்டனில் உருவாக்கப்பட்டது தான் பிரிவி கவுன்சில். இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த கவுன்சில் தான், இறுதி அதிகாரம் படைத்த வழக்கு விசாரணை அமைப்பாக இருந்தது.
அதனால் இந்திய நீதிமன்றங்களில் தீர்க்க முடியாத வழக்குகள் பிரிவி கவுன்சிலில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டன. அப்படித்தான் திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கையும் பிரிவி கவுன்சில் விசாரித்து தீர்ப்பளித்துள்ளது.