ஈரோடு கிழக்கில் கள்ள ஓட்டு புகார்! அடையாள அட்டையுடன் வந்த பெண் ஏமாற்றம்

1

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமது ஓட்டை வேறு யாரோ பதிவு செய்துவிட்டனர் என்று பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.


@1brஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று(பிப்.5) காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. ஓட்டுப்பதிவு தொடங்கியது முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.


இந் நிலையில வளையக்கார வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஓட்டுச்சாவடியில் பெண் ஒருவர் தமது கணவருடன் ஓட்டு போட வந்துள்ளார். அவரது பெயர் பரிதா பேகம். வரிசையில் நின்று உள்ளே ஓட்டு போடும் அறைக்கு வந்த போது அவரின் ஆவணங்களை அங்குள்ள அதிகாரிகள் சரிபார்த்தனர்.


அப்போது, உங்களின் ஓட்டு ஏற்கனவே போடப்பட்டுவிட்டது. உங்களை மீண்டும் உள்ளே அனுமதிக்க முடியாது என்று திருப்பி அனுப்பி விட்டனர். இதுகுறித்து பரிதா பேகம் கூறியதாவது;


நான் ஓட்டு போட சென்ற போது உங்கள் பெயரில் ஏற்கனவே ஒருவர் ஓட்டு அளித்து விட்டு சென்றுவிட்டார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். பர்தா அணிந்தவர் வந்து ஓட்டுப்போட்டு விட்டு சென்றுவிட்டார். அவர் யார் என்று எங்களுக்கு தெரியாது என்கின்றனர்.


ஓட்டுப் போட்டவர் கையெழுத்தை காட்டுங்கள் என்று அதிகாரிகளிடம் கேட்டேன். ஆனால், அவர்கள் கூட்டமாக இருக்கிறது என்று கூறி அதை செய்ய மறுக்கின்றனர். பிறகு வாருங்கள் என்று கூறிவிட்டதால் நான் வந்துவிட்டேன். இதுகுறித்து அதிகாரிகளிடம் நான் புகார் அளிக்க உள்ளேன்.


எனக்கு இது ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது. நான் 11.15 மணிக்கு தான் வருகிறேன். எனக்கு பதிலாக யார் ஓட்டு போட்டனர் என்றே தெரியவில்லை. அதிகாரிகள் பொருட்படுத்தாமல் இருக்கின்றனர்.


உள்ளே என்ன நடக்கிறது,நடந்தது என்பதே எனக்கு தெரியவில்லை. என் ஓட்டை யாரோ போட்டுவிட்டனர். என் கையில் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. ஆனால் உள்ளே வேறு யாரோ உன் ஓட்டை போட்டுவிட்டதாக கூறி என்னை வெளியே அனுப்பி விட்டனர். இது சம்பந்தமாக நான் கட்டாயம் புகார் அளிப்பேன்.

இவ்வாறு பரிதா பேகம் கூறி உள்ளார்.

Advertisement