பிச்சைக்காரர்கள் கணக்கெடுப்பு சென்னையில் துவக்கம்!
சென்னை: சென்னை மாநகராட்சி பிச்சைக்காரர்கள் மற்றும் வீடற்றவர்களை கண்டறிய கணக்கெடுக்கும் பணியை துவக்கியுள்ளது. ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு, மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் ஒர்க் உடன் இணைந்து, கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
பிச்சைக்காரர்கள் மற்றும் சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு இருப்பிடம் ஏற்படுத்திக் கொடுப்பது இதன் முதன்மையான நோக்கமாகும். இந்த கணக்கெடுக்கும் பணி மார்ச் வரை நடைபெறும். 200 வார்டுகளிலும் கணக்கெடுக்கும் பணி நடக்க உள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: 2018ம் ஆண்டின் கணக்கெடுப்பு படி, 11 ஆயிரம் பேர் வீடு இல்லாமல் உள்ளனர். 2022ம் ஆண்டு மாநகராட்சி நடத்திய ஆய்வில் 10,300 பேர் உள்ளனர். 49 இரவு தங்குமிடங்களில் அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
கடந்த கால ஆய்வுகளில், வீடற்றவர்களில் 50% பேர் பிராட்வே, பாரிஸ், ராயபுரம் மற்றும் தி.நகர் ஆகிய இடங்களில் குவிந்திருப்பதைக் கண்டறிந்தோம். சென்னைக்கு 83 தங்குமிடங்கள் தேவை. ஆனால் 53 மட்டுமே உள்ளன.
மனநலம் இல்லாதவர்களில் சிலர் முழுநேர பிச்சைக்காரர்களாக இருந்தாலும், பலர் இரவில் தெருக்களில் வசிக்கின்றனர். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியங்களில் நிதி உள்ளது. அவற்றைக் கொண்டு இவர்களுக்கு உதவி செய்ய முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.