விஜய் துர்க் ஆனது வில்லியம் கோட்டை: இந்திய ராணுவத்தின் கிழக்கு பிராந்திய தலைமையகத்தின் பெயர் மாற்றம்
கோல்கட்டா: காலனித்துவ மரபுக்கு முடிவு கட்டும் வகையில், கிழக்கு பிராந்திய ராணுவ தலைமையகத்தின் பெயர் விஜய் துர்க் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இந்திய ராணுவத்தின் கிழக்கு பிராந்தியத்தின் தலைமையகம் மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் உள்ளது. தலைமையகத்திற்கு வில்லியம் கோட்டை என பெயர் சூட்டப்பட்டு இருந்தது. இந்த கோட்டையானது கடந்த 1781ம் ஆண்டு கிழக்கு இந்திய கம்பெனி ஆட்சிக் காலத்தில் ஹூக்ளி நதிக்கரையில் கட்டப்பட்டது. 170 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த தலைமையகத்தில், பல கட்டடங்கள் உள்ளன.
இங்கு ஆறு நுழைவு வாயில்கள் உள்ளன. அவற்றிற்கு சவுரிங்கி, பிளாசி, கல்கத்தா, வாட்டர் கேட், புனித ஜார்ஜ் மற்றும் டிரசரி கேட் என பெயர் சூட்டப்பட்டு இருந்தது. 1962ம் ஆண்டு இந்தியா சீனா இடையே ஏற்பட்ட போரைத் தொடர்ந்து, 1963ம் ஆண்டு இந்த கோட்டை, இந்திய ராணுவத்தின் தலைமையகமாக மாறியது. அதற்கு முன்னர் உ.பி., மாநிலம் லக்னோவில் தலைமையகம் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் காலனித்துவ மரபிற்கு முடிவு கட்டும் வகையில், கோல்கட்டாவில் உள்ள கிழக்கு பிராந்திய தலைமைகமான வில்லியம் கோட்டை என்ற பெயரை விஜய் துர்க் பெயர் சூட்டப்பட்டு உள்ளதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.
மேலும், இங்குள்ள புனித ஜார்ஜ் கேட் பெயரையும் சிவாஜி கேட் எனவும், கிச்னர் ஹவுசை மானேக்சா ஹவுஸ் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. கோட்டை உள்ளே இருந்த ரசல் பிளாக்கிற்கு பக்கா ஜதின் பிளாக் ( பக்கா ஜதின் என்று அழைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் ஜதிந்திரநாத் முகர்ஜி நினைவாக)எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.