ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக்கூடாது: டிரம்ப் கண்டிப்பு
வாஷிங்டன்: '' ஈரான் அணு ஆயுதம் வைத்து இருக்கக்கூடிய நாடாக இருக்கக்கூடாது,'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்கா அந்நாடு மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. சமீபத்தில் அதிபராக பதவியேற்ற டிரம்ப், ஈரானுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், பல நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டு உள்ளார். இதனை ஈரான் கண்டுகொள்ளவில்லை. அணு ஆயுதத்தை அடைந்தே தீருவோம் எனக்கூறியுள்ளது.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிறந்த மற்றும் வெற்றிகரமான நாடாக ஈரான் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால், அந்நாடு அணு ஆயுதம் வைத்து இருக்க முடியாத நாடாக இருக்க வேண்டும். இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானை அடித்து நொறுக்கப்போவதாக வரும் செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவை. அமைதியான முறையில் ஈரான் வளர்ச்சி பெறவும், செழிக்கவும் தேவையான அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். இதற்கான பணிகளை உடனடியாக துவக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது மத்திய கிழக்கு நாடுகளில் கொண்டாட்டங்கள் நடக்கும். கடவுள் அந்நாட்டை ஆசிர்வதிக்கட்டும். இவ்வாறு அந்த பதிவில் டிரம்ப் கூறியுள்ளார்.