நாக்பூரில் சாதிக்குமா இந்தியா * ஒருநாள் தொடர் ஆரம்பம்

நாக்பூர்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் போட்டி தொடர் இன்று துவங்குகிறது. இதில் சிறப்பாக செயல்பட்டு இந்தியா கோப்பை வெல்லக் காத்திருக்கிறது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராகும் வகையில் மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று நாக்பூரில் பகலிரவு ஆட்டமாக நடக்கிறது.
'சீனியர்' நம்பிக்கை
இந்திய அணி கேப்டன் ரோகித், துணைக்கேப்டன் சுப்மன் கில் துவக்கம் தர காத்திருக்கின்றனர். 'மிடில் ஆர்டரில் கோலி, ஸ்ரேயாஸ், ஹர்திக் பாண்ட்யா வரவுள்ளனர். ஐந்தாவது இடம் விக்கெட் கீப்பருக்கு தரப்படும்.
இதில் 2023 உலக கோப்பை தொடரில் 452 ரன் குவித்து அணிக்கு கைகொடுத்த ராகுல், வாய்ப்பு பெறலாம். அதேநேரம் ராகுல் பந்துகளை வீணடிக்கிறார். இடது கை பேட்டராக உள்ள ரிஷாப் பன்டும் விக்கெட் கீப்பர் போட்டியில் உள்ளார். அணியின் வெற்றிக்கு துருப்பு சீட்டாக ரிஷாப் இருப்பார் என நம்பப்படுவதால், ராகுலுடன் சேர்ந்து அணியில் களமிறங்கலாம். இதனால், ஸ்ரேயாஸ் தனது இடத்தை விட்டுத்தர நேரிடும்.
வருவாரா வருண்
பந்துவீச்சில், காயத்தில் இருந்து மீண்ட முகமது ஷமி (வேகம்), குல்தீப் யாதவ் (சுழல்) மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன், இவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டும். அர்ஷ்தீப் சிங் தன் பங்கிற்கு கைகொடுக்க முயற்சிப்பார்.
இங்கிலாந்து 'டி-20' தொடரில் 14 விக்கெட் சாய்த்த வருண் சக்ரவர்த்தி, இன்று ஒருநாள் போட்டியில் அறிமுக வாய்ப்பு பெற காத்திருக்கிறார். மறுபக்கம் சுழல் ஆல்ரவுண்டராக யாரை சேர்ப்பது என குழப்பம் நீடிக்கிறது.
2023 உலக கோப்பை தொடருக்குப் பின் ஒருநாள் போட்டியில் பங்கேற்காத ஜடேஜா, சமீபத்திய போட்டிகளில் நம்பிக்கை தரும் அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் இடையே போட்டி காணப்படுகிறது.
ரூட் வருகை
இங்கிலாந்து அணி தனது கடைசி இரு ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீசிடம் கோப்பை இழந்த சோகத்தில் உள்ளது. சமீபத்திய 'டி-20' தொடரில் ஏமாற்றிய இங்கிலாந்து அணியில் கூடுதலாக ஜோ ரூட் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இவரது வருகை 'மிடில் ஆர்டரில்' பேட்டிங்கை பலப்படுத்தலாம்.
கேப்டன் பட்லர், டக்கெட், ஹாரி புரூக், பில் சால்ட் உள்ளிட்டோர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்.
பவுலிங்கில் ஆர்ச்சர், மார்க் உட், ஓவர்டன், சாகிப் மக்மூத் உள்ளனர். சுழலில் அடில் ரஷித்துடன் லிவிங்ஸ்டன் இணைய உள்ளார்.

சீனியர்களுக்கு நெருக்கடி
கடந்த 2023 உலக கோப்பை தொடரில் கோலி 36, (765 ரன்), ரோகித் 37, (597) இந்தியா பைனலுக்கு முன்னேற உதவினர். அடுத்து இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் போட்டியில் மட்டும் கோலி (24, 14, 20), ரோகித் (58, 68, 35) பங்கேற்றனர்.
2024ல் உலக கோப்பை வென்ற பின், சர்வதேச 'டி-20' ல் இருந்து ஓய்வு பெற்றனர். இதன் பின், கடந்த மூன்று மாதமாக இவர்களது 'பார்ம்' பாதாளத்துக்கு சென்று விட்டது. நியூசிலாந்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கோலி (8 டெஸ்ட்) தலா ஒரு சதம், அரைசதம், ரோகித் (8 டெஸ்ட்) ஒரு அரைசதம் மட்டும் அடித்தனர். ரஞ்சி கோப்பை தொடரிலும் கோலி 6, ரோகித் 3, 28 ரன் மட்டும் எடுக்க, ஓய்வு நெருக்கடி அதிகரித்துள்ளது.
ரோகித் கூறுகையில்,''இங்கிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மட்டும் இப்போதைக்கு கவனம் செலுத்துகிறேன். அடுத்து என்ன நடக்கும் என பிறகு பார்க்கலாம்,'' என்றார்.

58 வெற்றி
ஒருநாள் அரங்கில் இரு அணிகள் மோதிய 107 போட்டியில் இந்தியா 58, இங்கிலாந்து 44ல் வென்றன. 2 போட்டி 'டை' ஆனது (முடிவில்லை 3).

மழை வருமா
நாக்பூரில் இன்று வானம் தெளிவாக இருக்கும். போட்டி நேரத்தில் மழை வர வாய்ப்பில்லை.

Advertisement